வரவு செலவுத் திட்ட விவாதத்தில் மஹிந்த உரையாற்ற மாட்டாராம்!
வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் கருத்து தெரிவிப்பதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக அவரது ஊடக செயலாளர் ஊடகமொன்றிற்கு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் நேரம் ஒதுக்கப்படுகின்றபோது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் அநுரகுமார திசாநாயக்க, மஹிந்தவுக்கு போதுமான நேரத்தை ஒதுக்குவதில்லை என குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்காத சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றில் போதிய நேரம் ஒதுக்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு தடவையேனும் நாடாளுமன்றில் உரையாற்றியதில்லை. கடந்த மாதம் இடம்பெற்ற காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்த பரணகம மற்றும் உதாலகம அறிக்கை மீதான விவாதத்திற்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அவர் அதில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.