மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட தமிழ் மக்களும் இடமளிக்கமாட்டார்கள் - மகிந்த அமரவீர
நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றேன் என்று நாடாளுமன்றில் தெரிவித்த அமைச்சர் மகிந்த அமரவீர, இனவாதம் பேசியே இரு தடவைகள் தோற்றோம். எனவே, இனவாதத்தையும், அவநம்பிக்கையையும் கைவிட்டு இனி முன்னோக்கிச் செல்வோம் என்று ஆளும், எதிர்த்தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தhர்.
அவர், மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் புதிய அரசொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய அரசில் அங்கம் வகிப்பதில் நான் பெருமையடைகின்றேன். இந்த அரசினூடாக நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இனவாதம் பேசியதால்தான் ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் நாம் தோல்வியடைந்தோம். எனவே, இனவாதம் போதும் வேண்டாம் என எமது தரப்பினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் கூறுகின்றேன்.
புலிச் சந்தேகநபர்களின் நிபந்தனையுடன் கூடிய பிணை குறித்து குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு பேசிக்கொண்டு நாம் அவநம்பிக்கையுடன் செயற்படமுடியாது. அவநம்பிக்கையுடன் பேசவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நான் கூறுகின்றேன்.
சிவாஜிலிங்கம் போன்றோர் இவ்வாறான கருத்துகளைக் கூறுகின்றனர். 10 பேரைக்கூட சேர்த்துக்கொள்ள முடியாத நினைவுகூரல் நிகழ்வுகளை நாம் பார்த்தோம். எனவே,,இனவாதம் இனியும் வேண்டாம். இனவாதத்தை வெளிப்படுத்தும் இடமாக இந்த நாடாளுமன்றத்தையும் பயன்படுத்தவேண்டாம். எமது காலத்தில் யுத்தம் ஏற்படாது. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட தமிழ் மக்களும் இடமளிக்கமாட்டார்கள் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். ஒருசில அரசியல்வாதிகள்தான் இப்படியான கருத்துகளைக் கூறுகின்றனர். தமிழ் மக்கள் அவ்வாறில்லை என்றார்.