Breaking News

இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து விசாரிக்கத் தயார் என்கிறது இலங்கை அரசு

இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பான ஐ.நா குழுவின் குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

இரகசிய தடுப்பு முகாம்களை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. திருகோணமலை உள்ளிட்ட ஏனைய இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த இலங்கைஅரசாங்கம் தயாராக உள்ளது.

தடுப்பு முகாம்கள் இரகசியமான முறையில் கையாளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானபோது அதனை எந்தச் சந்தர்ப்பத்திலும் மூடி மறைக்க இந்த அரசாங்கம் எத்தனிக்கவில்லை. மாறாக சரியான தகவல்களை பெற்றுத் தாருங்கள் விசாரணை நடத்தி உண்மையினை கண்டறிவோம் என்றே கூறியிருந்தது.

ஐ.நா. நிபுணர் குழு கேட்டுக் கொண்டதன்படி இரகசிய தடுப்பு முகாம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.ஐ.நா குழுவினர் கோரிய அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அனைத்து விபரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. தேவைப்பட்ட அனைவரையும் அவர்கள் சந்தித்து உரையாடினர். காவல்துறையினரும் கடற்படையினரும் இவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

இவர்கள் இரகசிய தடுப்பு முகாம் குறித்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர். இது கடந்த காலத்தை பற்றியது. தற்போது அங்கு எவரும் தடுத்து வைக்கப்படவில்லை. அவர்களுக்கு அதுகுறித்த முழுமையான விசாரணையே தேவைப்படுகிறது. அந்த விசாரணையை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.