நைஜீரியாவின் யோலா நகரில் குண்டு தாக்குதல்: 30 பேர் பலி
நைஜீரியாவின் யோலா நகரில் சன நெருக்கடி மிக்க சந்தைப் பகுதியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், பலர் படுகாயமடை ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மரக்கறி மற்றும் பழக்கடைகள் அமைந்துள்ள சந்தை தொகுதியொன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவித்திருந்தது.
மேற்படி சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பு பொறுப்பேற்காத நிலையில், இந்த தாக்குதல் சம்பவமானது பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பானது, யோலா நகரில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் சம்பவமாகும். யோலா நகரில் கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.