பயங்கரவாதிகளைப்போன்று இன்னமும் நடத்துகின்றனர் - சமந்தாவுடனான சந்திப்பில் விக்கினேஸ்வரன்
தமிழ் மக்களை பயங்கரவாதக் குழுக்களாக பார்க்கும் செயற்பாடு தொடர்ந்து வருகின்றது. இத்தகைய நடவடிக்கை மனவேதனை தருகிறது. எங்கள் மத்தியில் இராணுவம் இருந்து வீடுகளையும், காணிகளையும் வாழ்வாதாரத்தையும் பிடுங்குவது தொந்தரவாக உள்ளது. தற்போதும் தகவல் திரட்டும் பணி தொடர்கின்றது
என்று யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகை தந்த ஐ.நா. விற்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்துக்கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் சமந்தாபவர் தலைமையிலான குழுவினர் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின்போதே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் வடமாகாணத்தில் உள்ள இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இச் சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவிக்கையில்;
குறித்த சந்திப்பு நன்மை பயக்கத்தக்கதாக அமைந்துள்ளது. ஏன் என்றால் உலகத்தின் மிக வலுவான நாட்டினுடைய பிரதிநிதியாக உலகத்தின் அனைத்து மக்களையும் அணைத்துக் கொள்ளும் பாரிய நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக சமந்தாபவர் இருப்பதால் இவருடனான சந்திப்பை பெரிய வாய்ப்பாக கருதுகின்றேன்.
அவர் முக்கியமாக ஒரு விடயத்தை கூறினார். வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகவும் கரிசனையோடு செயற்படுகின்றார். அந்த செயற்பாட்டின் நிமித்தமே தான் இங்கு வந்துள்ளதாகவும் நாங்கள் இந்த நாட்டில் ஜனநாயகத்தை வரவழைத்து கொண்ட காரணத்தினால் தாங்களும் ஜனநாயக நாடு என்ற முறையிலே எங்களோடு சேர்ந்து ஒத்துழைப்பதில் சந்தோசமடைவதாகவும் தம்மாலான சகல உதவிகளையும் நல்கப் போவதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
மேலும் முன்னர் இருந்த சற்று எதேச்சதிகாரமான வாழ்க்கை முறை தற்பொழுது மாற்றமடைந்து வருவதாக அவர் எடுத்துக்கூறியதுடன் பல விதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
அமெரிக்காவிலும் முன்னாள் ஜனாதிபதி புஷ் அவர்களுடைய ஆட்சியும் அதிகாரமும் மாற்றப்பட்டு தற்போதைய ஜனாதிபதி ஒபாமா ஆட்சிக்கு வந்த காலத்தில் சுமார் 9 மாதங்கள் கடந்த நிலையில் பலர் இது குறித்து அதிருப்தி தெரிவித்து எதுவும் செய்யவில்லை, போதாது காணாது என்றெல்லாம் கூறினார்கள் அதேபோல் நீங்கள் வடமாகாணத்தில் இதுவரை நடந்த மாற்றங்கள் போதாது என்ற மனநிலையில் இருப்பதை தான் அறிந்து கொண்டேன். சற்று தாமதமானாலும் பல வித நன்மைகளை பெற தாங்கள் நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.
உதாரணத்திற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் கடந்த அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட இயக்கங்களும் மக்களும் சில நபர்களும் அந்த தடையில் இருந்து நீக்கப்பட்டதை எடுத்துக் காட்டினார்.
இத்தகைய விடயங்களை மெல்ல மெல்லத்தான் செய்ய வேண்டியுள்ளதாகவும் பல விதங்களில் முன்னைய அரசாங்கத்தின் அலுவலர்களும் அவர்களை சார்ந்தவர்களும் எந்த ஒரு நடவடிக்கையும் தமிழ்மக்கள் சார்பில் சிறுபான்மையினர் சார்பில் நடைபெற்றொலும் அதனை பெரிது படுத்தி ஏதோ சிங்கள மக்களுக்கு சார்பில்லாத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று குறிப்பிடுவது வழக்கமாக இருப்பதே தாங்கள் எதை அரசாங்கத்திற்கு கூறினாலும் அவர்கள் தாமதமாவதற்கு காரணம் என்றும் என்னிடம் சமந்தாபவர் சுட்டிக்காட்டினார்.
அது மட்டுமன்றி இலங்கையில் எந்த ஒரு விடயத்தை தொடங்கினாலும் மிகவும் தாமதப்பட்டுத்தான் முடித்துக் கொடுக்கிறார்கள். எதனையும் உடனுக்குடன் செய்யாத நிலை இந்த நாட்டில் இருப்பதாக கூறினார்.
தாங்கள் உடனுக்குடனேயே எந்த ஒரு காரியத்தையும் செய்ய முற்படுவதாகவும் அது கூட போதாது என்று கூறுவதை நினைவுபடுத்தியதுடன் இங்கு நடப்பவை தாமதமடைந்தாலும் பல விதங்களில் நன்மைகளை பெற்றுக்கொடுக்க தாங்கள் உறுதி எடுப்பதாக குறிப்பிட்டார்.
எங்களை பொறுத்தவரை எங்களை பீடித்திருக்கும் மிகப் பெரிய பிரச்சினை இராணுவத்தினர் எங்கள் மத்தியில் இருந்து கொண்டு வாழ்வாதாரங்களை அவர்கள் பிடிங்கி கொண்டும் காணிகளை பிடிங்கிக் கொண்டும் வீடுகளை பிடுங்கிக்கொண்டும் இருப்பதேயாகும். எங்களுக்கு இந்த விடயமே பிரச்சினைகளையும் தொந்தரவுகளையும் தருகிறது.
6 வருடங்களுக்கு பின்னரும் இவ்வாறு நடைபெறுவது எங்களுக்கு மனவருத்தத்தை தருகின்றது.
அவர்கள் முன்பிலும் பார்க்க தற்போது தங்களுடைய முகாம்களில் அடைபட்டு இருப்பது உண்மையாக இருந்தாலும் தங்களுடைய தகவல் சேகரிக்கும் கடமைகளில் இப்போதும் ஈடுபட்டு வருகின்றார்கள். பயங்கரவாதிகள் என்ற மனோநிலையிலே தமிழ்மக்கள் அனைவருமே அவர்கள் பார்க்கின்றனர். தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணத்தில் இவர்கள் செயல்புரிந்து வருவது மனதிற்கு வேதனை தருகிறது என்ற கருத்தை நாம் அவரிடம் முன்வைத்தோம்.
இதைவிட வேறு பல பிரச்சினைகள் தேவைகள் தொடர்பிலும் எடுத்துக் கூறினோம் இவற்றையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். மேலும் பாதுகாப்புக்கு தற்போது கூட வரவுசெலவுத்திட்டம் மூலம் பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை யெல்லாம் எங்களுக்கு நன்மை பயர்க்கக்கூடிய விதத்தில் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என எடுத்துக் கூறியதுடன் ஏனைய மாகாணங்களிலும் பாரக்க நாங்கள் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் இருப்பதால் எங்களுக்கு கூடிய நிதி தேவை என்பதை எடுத்துக்கூறினோம். இவ்வாறு பல விடயங்களையும் எடுத்து கூறியுள்ளோம்.
இத்தகைய பிரச்சினையை அவர் ஏற்றுக்கொண்டார். உங்களுடைய பிரச்சினையை நன்றாக உணர்ந்து கொள்கின்றோம். நாங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்து உங்களுக்கு செய்ய வேண்டிய அனைத்திற்கும் எல்லாவிதமான நன்மைகளையும் செய்வோம் என்று அவர் உத்தரவாதம் தந்தார் என்று முதலமைச்சர் கூறினார்.