காணாமல் போனோரின் உறவுகளிடம் ஐ.நா குழு வாக்குமூலம் பெற்றது
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான விசேட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மாலை வரையில் ஐ.நா அதிகாரிகள், காணாமல் போனோரின் உறவனர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது காணாமல் போன லலித்குமார் வீரராஜின் தந்தை, பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி உட்பட புத்தளம், அநுரதபுரம் என பல பகுதிகளில் இருந்து வந்த பலர் நேற்று ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதன்போது, காணாமல் போனோரின் உறவினர்கள் ஊடகங்களுக்கு எதுவித கருத்தினையும் தெரிவிக்கக் கூடாது என ஐ.நா அதிகாரிகளினால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.