தமிழீழ மாவீரர் நாள் அறிக்கை -2015 (காணொளி இணைப்பு)
தலைமைச் செயலகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27.11.2015.
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காகவும் எமது இனத்தின் இருப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த உத்தமர்களை நெஞ்சுருகிப் பூசிக்கும் புனித நாள். பூமிப் பந்திலே தமிழர்களின் சுதந்திர தாகத்தைப் பறைசாற்றிய புனிதர்களைப் போற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள்.
இன்று,தமிழீழத் தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சிகொள்ளும் உன்னத நாள்.
மனிதவாழ்வின் இயல்பான சமூக வாழ்வைத் துறந்து, சுயநல பூதங்களை ஒழித்து, தாம்வரித்துக்கொண்ட பொதுநல இலட்சியத்துக்கான போராட்டத்தில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் எமது இனத்தின் காவல் தெய்வங்கள்.
தமிழினம் உருத்தோன்றிய காலம்முதல் வாழ்ந்துவந்த எமது பூர்வீக மண்ணினதும் எமது மக்களினதும் விடுதலைக்காகவே மாவீரர்கள் போராடினார்கள்.
தேச விடுதலைப் போராட்டத்தை ஒரு புனிதமான பணியாக ஏற்று, வீரம், தியாகம், விடுதலை உணர்வு ஆகிய உயரிய இலட்சியப் பண்புகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். தமிழீழ மக்களின் தேசிய அபிலாசையாக வரலாற்றுரீதியாக எழுந்த தனியரசுக் கோரிக்கைக்கு ஒரு செயற்பாட்டு வடிவம்
கொடுத்து, அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் இலட்சிய உறுதியுடனே மாவீரர்கள் போராடினார்கள்.
மாவீரர்களின் உறுதியும், அடங்காத தாய்மண் பற்றும், தன்னலமற்ற விடுதலைக்கான துறவறமுமே உலக அரங்கில் எமது இனத்தைத் தலைநிமிர வைத்தது. அவர்களின் உயர் ஒழுக்கமே எமது விடுதலைப் போராட்டத்தை உலகம் பார்த்து அதிசயிக்க வைத்தது. மாவீரர்களின் ஒப்பற்ற தியாகமே தமிழரின் வீரத்தையும், தமிழீழ சுதந்திர தாகத்தையும் உலகறியச் செய்தது. அவர்களது ஈடிணையற்ற அர்ப்பணிப்பே எமது விடுதலை வேட்கைக்கு உரமூட்டி, எமது இனத்தின் சுதந்திரப் போராட்ட இயக்கவியலை சதா உந்திக்கொண்டிருக்கிறது.
இம் மாவீரர்களை எமது விடுதலைப் போராட்டத்துக்கு உவந்தளித்த பெற்றோர்களையும் குடும்ப உறவுகளையும் தேசத்தின் பெரு மதிப்பிற்குரியவர்களாகப் போற்றி நிற்கிறோம்.
எமது அன்பான மக்களே.
வரையறுக்கப்பட்ட ஒரு தாயகம், ஒரு தனித்துவமான மொழி, பண்பாடு, பொருளாதார வாழ்வு, ஒரு தனித்துவமான நீண்ட வரலாறு என எல்லாம் கொண்ட ஒரு தேசிய இனமாக, ஒரு தேசமாக தமிழீழ மக்கள் அமையப் பெற்றவர்கள். சிங்கள அரசானது தமிழரின் தேசியத் தனித்தன்மையை அழித்து, தமிழ்மக்களை இன ரீதியாக ஒழித்துக்கட்ட முற்பட்ட பொழுதுதான் பிரிந்துசென்று தனியரசை நிறுவ தமிழீழ மக்கள் முடிவுசெய்தனர்.
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழ மக்கள் மேற்கொண்ட இந்தத் தனியரசுத் தீர்மானத்தை நடைமுறைச் சாத்தியமாக்கி, அதற்கு எதார்த்த அரசியல் வடிவம் கொடுக்கவே எமது இயக்கம் போராடிவருகிறது.
எமது மக்கள் தமது சொந்த மண்ணில், காலங் காலமாக வாழ்ந்துவந்த வரலாற்றுத் தாயகத்தில்,நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவமாக வாழவேண்டுமென்ற தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கை, பன்னெடுங் காலமாக நீடித்துச் செல்கிறது. இந்தக் கால இடைவெளியில், முறிந்த பேச்சுக்களும், உடைந்த ஒப்பந்தங்களும், முடிவில்லாப் போர்களுமாக நீடித்தது.
உலக ஏகாதிபத்திய ஆதிக்கச் சதிவலைக்குள் எமது சுதந்திரப் போராட்டம் அகப்பட்டது.
இன்று எந்த நீதியும், நிரந்தர அரசியல் தீர்வுமற்ற நிலையில் உலகெங்கும் தமிழ்மக்கள் நீதிவேண்டி உரிமைக்குரல் எழுப்புகிறார்கள்.
ஒரு நூற்றாண்டு காலச் சிங்களத் தலைவர்களில் எவரிடமும் தமிழரின் தேசிய
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விருப்பமோ, அரசியல் திடசித்தமோ இருக்கவில்லை. அப்படியொரு தீர்வை முன்மொழிவது அவர்களது நோக்கமும் இல்லை. தமிழரைத் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு முற்போக்கான திட்டத்தை முன்மொழிந்து, சிங்களப் பேரினவாத சக்திகளைப் பகைத்துக்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை.
புனித நாடு, புனித இனம், புனித மதம் என்ற கோசங்களுடன் மகாவம்ச, தீபவம்ச ஆன்மாவில் இருந்து விடுபடாத சிங்களப் பேரினவாதம், இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளாக நீண்ட வரலாற்றுடனும், நாகரீகத்துடனும், தனித்துவ தேசியமாக, தனக்கே உரித்தான தாயக மண்ணில் வாழ்ந்துவரும் எமது மக்களை, அங்கீகரிக்க மறுக்கிறது. சிங்களப் பௌத்த மதமும், மனப்பாங்கும் தமிழர்களை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டது. இந்த மனப்பாங்கு சிங்கள அரசிலும் சிங்கள இனத்திலும் ஆழ வேரோடிவிட்டது.
இந்த நச்சுக் கருத்துக்களினாலே இன்றளவும் தொடர்ந்து சிங்கள சமூகம் உள்ளீர்க்கப்பட்டு வருகிறது.
தமிழினத்துக்கு எதிராகவும், அதேவேளை இந்தியாவுக்கு எதிராகவும் சிங்கள தேசம் கொண்டுள்ள இனப்பகைமை உணர்வு இருபது நூற்றாண்டுகளுக்கு மேலானது. ஐக்கியம், பிரதேசம், ஒருமைப்பாடு, இறைமை என்பதெல்லாம் சிங்கள இனத்தின் நில ஆதிபத்திய உரிமையை நிலைநாட்டும் கோட்பாடுகளாக அமைந்திருக்கின்றன. புத்தரின் புனித பூமியில் ஒற்றை ஆட்சி என்ற போர்வையில் ஒற்றை இனச் சர்வாதிகாரப் போக்கு நீண்டுகொண்டே செல்கிறது.
இதனையே, சிறிலங்கா அரசின் அரசியல் நடவடிக்கைகளும், வெளியுறவுக் கொள்கையும் பிரதிபலிக்கின்றன.
தமிழர்களுக்கு உரிமை வழங்குவது சிங்கள இனத்துக்கு எதிரானது, ஆபத்தானது, என்ற நச்சு விதையை சிங்களவர்கள் மத்தியில் இந்த சித்தாந்தங்கள் விதைக்கின்றன. இதன் அடிப்படையில்தான் சிங்களவர்களின் அரசு, கட்சிகள், ஊடகங்கள், சமூகம் ஆகிய அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசின் யாப்பும் இதனை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டது.
இன்று பெரும்பான்மைச் சிங்களக் கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து, நல்லாட்சி என்ற மாயையைத் தோற்றுவித்துள்ளார்கள். பன்னாட்டுச் சமூகத்தில் இனவழிப்புச் செய்த பழியில் இருக்கும் சிங்கள அரசைப் பாதுகாக்கவே இந்தக் கூட்டாட்சி உருவாக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.
ஒரு நீண்டகாலக் கட்டமைக்கப்பட்ட புதுமையான மென்போக்கு இனவழிப்பை – ராஜபக்ச அரசின் இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாக – தற்போது அரசதலைவர் மைத்திரியும் பிரதமர் ரணிலும் இணைந்த கூட்டு அரசாட்சி மறைமுகமாக முன்னெடுத்து வருகின்றது.
தமிழர் தாயகம் சிங்களப் படையாட்சிக்குள் சிக்கிச் சீரழிந்துவருகிறது. புத்தவிகாரைகள் அமைத்து, வியாபார நிலையங்களை நிறுவி, பெரும்பான்மை இனத்தவர் தமிழர் தாயகத்தில் நிரந்தரமாகவே குடியேறி, நில அபகரிப்பைச் செய்ய ஏதுவான நிகழ்வுகள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன.
தமிழரின் கடல்வளங்கள் சூறையாடப்படுகின்றன. தமிழ்ப் பெயர்கள் சிங்கள மயமாக்கப்படுகின்றன. தமிழீழத்தின் வன அழிப்புக்களும் அவற்றில் சிங்களக் குடியேற்றங்களும் திட்டமிட்டபடியே தொடர்கின்றன. தமிழினத்தின் இளஞ் சமூகத்தினரை, போதைக்கும் சீர்கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாக்கும் கைங்கரியத்தைச் சிங்கள அரச இயந்திரம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. இவை அனைத்தும் இனவழிப்பின் குறியீடாகத் தொடர்ச்சியாக எமது இனப் பண்பாட்டைக் குலைத்து, தமிழரின் பாரம்பரியத் தேசிய அடையாளத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில்,“நல் லாட்சி” எனற் போர்வையில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
ராஜபக்ச அரசின் இராணுவ இனவழிப்பை, அரசியல் வெற்றியாக்குவதுதான் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனா ஆகியோரின் கூட்டு அரசாங்கத்தின் பணி என்பதை எமது மக்கள் புரிந்து செயற்படவேண்டும். இனவழிப்பிற்கான தவறுகளை, ராஜபக்ச போன்ற தனிநபர்கள் மீது சுமத்திவிட்டு, சிங்கள அரசைக் காப்பாற்றி, தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய அடிப்படையில் எந்தத் தீர்வையும் முன்வைக்காமல் காலத்தை இழுத்தடித்து, தமிழினத்தைப் பலவீனப்படுத்துவதே ரணில் முன்னெடுத்துவரும் தலையாய பணியாக அமைந்திருக்கிறது.
இலங்கைத்தீவின் இனச்சிக்கலை வெறும் காணிப்பிரச்சனை, வேலைவாய்ப்புப் பிரச்சனை, தனிநபர்களின் போர்க்குற்றப் பிரச்சனை என்பதாகச் சுருக்கி, உள்நாட்டின் நிர்வாகரீதியிலான பிரச்சனையாக வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலைக்கு, தமிழர்தரப்பில் உள்ள மிதவாதத் தலைவர்கள் சிலர் துணைபோய்க் கொண்டிருப்பது எமது மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மக்களிடம் ஆணைபெற்று, நாடாளுமன்றம் சென்ற இவர்கள், மக்களின் நலனுக்காகவும் மக்களின் நம்பிக்கைக்குரியவாறும் செயற்படவில்லை.
தமிழ்மக்களின் நியாயமான அரசியல் போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு இவர்கள் பலியாகிவிட்டனர். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், பிற்போக்கான சந்தர்ப்பவாத சக்திகளின் வர்க்க அபிலாசைகளையும், அரசியற் சந்தர்ப்பவாதங்களையும் இனங்காணத் தவறினால் மாபெரும் வரலாற்றுத் தவற்றை இழைத்தவர்கள் ஆவோம்.
இந்நேரத்தில், தமிழீழ மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, “இனவழிபபு; ”, “பன் னாட்டு விசாரணை” போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி, அதன் கருத்துத் தளத்தில் உறுதியாக நின்று செயற்படும் தமிழ்த் தலைவர்களின் முனைப்பான செயற்பாடுகளை நாம் வரவேற்கிறோம்.
அதேவேளை, பன்னாட்டுச் சமூகத்திடம் அதற்கான நீதியைப் பெறுவதற்கான பணிகளைத் துரிதமாக முன்னெடுக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அன்பான மக்களே.
எமது மாவீரர்களின் உறுதியான, தொடர்ச்சியான, கடினமான போராட்டம் காரணமாகவே இன்று எமது மக்களின் தேசியப் பிரச்சனை உலக அரங்கைச் சென்றடைந்திருக்கிறது. எமது விடுதலைப் போராட்டம் உள்நாட்டு வரம்புகளை மீறி, உபகண்ட எல்லைகளைத் தாண்டி, சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தீவின் பூகோளக் கேந்திர நிலையும், இந்தியாவின் பிரதேச ஆதிக்க அபிலாசைகளும், உலக முதலாளித்துவத்தின் சந்தை விரிவாக்க
அக்கறைகளும் பின்னிப் பிணைந்ததாக ஒரு சிக்கலான பரிமாணத்தை அடைந்திருக்கிறது.
இதனால், எமது மக்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில் பெரும் இடையூறுகள் இருந்துவருகின்றன. இந்தச் சவாலையும் நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஒருபுறம் இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்கும், மறுபுறம் சிறிலங்கா அரசின் இனவழிப்புக்கும் இடையில் தமிழினம் சதா கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறது.
எமது மக்களின் தேசிய, சுயநிர்ணய உரிமையை இந்திய அரசும், இந்திய மக்களும், சர்வதேச சமூகமும் அங்கீகரிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும்.
தமிழீழத் தனியரசே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இறுதியான தீர்வு, நிரந்தரமான தீர்வு என்பதை இந்திய, உலக அரசுகளும் மக்களும் அங்கீகரிக்கச் செய்வதே இன்றைய தமிழ்த் தலைமைகளின், அமைப்புகளின், இளம் சமுதாயத்தின், உலகத் தமிழரின் வரலாற்றுப் பெரும் பணியாக விரிந்துகிடக்கிறது.
உண்மையான, தர்மத்தின் அடிப்படையிலான விடுதலைப் போராட்டங்கள் என்றைக்கும் இடையில் நின்றதில்லை. உலகத்தின் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சி உறுதியாக உண்டு.
உலகத்தின் ஆதரவு எமக்குத் தேவை என்பதில் தொடர்ந்தும் நாம் உறுதியாக உள்ளோம். அதேவேளை, எங்கள் போராட்டத்தின் தொடர்ச்சி அறுந்துவிடக் கூடாது என்பதிலும் நாம் மிக உறுதியாக நிற்கிறோம்.
எமது அன்பான தமிழக மக்களே.
தமிழீழ மக்களும் தமிழக மக்களும் வரலாற்று ரீதியாகவே இன உணர்வால் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளோம். சிங்கள இனவாத அரசுகளால் தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளைச் சர்வதேச அரங்கிற்குக் கொண்டுவந்து, அதன் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை உலகம் அறியச் செய்ததில் பெரும் பங்காற்றிய எமது தொப்புள்கொடி உறவுகளுக்கு எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது போராட்டத்துக்குத் தங்கள் முழு ஆதரவையும் தந்து, பன்னாட்டு அரங்கில் தமிழின அழிப்பை ஒப்புக்கொள்ளச் செய்வதற்காகத் தொடர்ந்து குரலெழுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், எமது சுயநிர்ணய உரிமையை உலகம் அங்கீகரிக்கும்வரை எம்மோடு ஒன்றிணைந்து தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்புமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம். சர்வதேச சமூகம், ஒரு வெளிப்படையான இனவழிப்பைப் போர்க்குற்றம் என்றும் மனித உரிமை மீறல்கள் என்றும் சிறுமைப்படுத்துவது நீதிக்குப் புதைகுழி வெட்டுவதாகவே அமையும்.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானம் சிங்கள அரசுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டது எமது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இனப்படுகொலையை விசாரிப்பதற்கு உள்ளகப் பொறிமுறையோ அல்லது தெரிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு ஆலோசகர்களுடன் கூடிய கலப்புப் பொறிமுறையோ, தமிழ் மக்களுக்குரிய நீதியை எந்த வகையிலும் வழங்காது. மாறாக, இனப்படுகொலையாளர்கள் குற்றத்துக்குரிய தண்டனையில் இருந்து காப்பாற்றப்படுவதுடன், பாதிக்கப்பட்ட இனமே தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாக்கப்படும் என்பதை சர்வதேச சமூகத்துக்கு நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
அதேவேளை, அரசியற் காரணங்களுக்காகக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி, கொடுஞ் சிறைகளுக்குள்ளே பல ஆண்டுகளாக நீதிக்குப் புறம்பாகச் சித்திரவதைகளையும் தாங்கொணாக் கொடுமைகளையும் அனுபவித்துவரும் தமிழ் அரசியற் கைதிகள் விடயத்தில் அக்கறை எடுத்து, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச நாடுகளையும் மனித உரிமை அமைப்புக்களையும் நாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அதேநேரத்தில், எமது மக்களினதும் அரசியல் கைதிகளினதும் அறவழிப் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, அவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்த முன்வருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழீழ மக்களின் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கும், சாத்வீகப் போராட்டத்திற்கும் ஒரு வலுவான, பொதுவான காரணம் உண்டு என்பதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே இலங்கைத் தீவில் இனப்பிரச்சனைக்கான தீர்வையும் அணுகவேண்டும். ஆட்சியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கோடு, எமது மக்களை அரைகுறைத் தீர்வுக்குள் முடக்கும் அநியாய முயற்சிகளை தமிழர் தேசம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
இச்சந்தர்ப்பத்தில், அண்மைக் காலமாக எமது மக்கள் உயிர்த்தஞ்சம் வேண்டி நிற்கும் புலம்பெயர் நாடுகளிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் அப்பாவிப் பொதுமக்களை இலக்குவைத்து நடாத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்தகைய தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களின் இழப்புகளிலும் துயர்பகிர்விலும் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.
எமது மக்களின் பாதுகாப்புக்காக முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனித்த நாளிலிருந்து இன்றுவரை நாம் அமைதிகாத்தே நிற்கிறோம்.
அப்பாவிப் பொதுமக்களை அழிக்க வேண்டுமென்ற நோக்கோடு மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், உண்மையான தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் இடைப்பட்ட வேறுபாட்டை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும். நாம், சமாதானத்தின் மீதான மிகுந்த பற்றோடும் எமது மக்களுக்கு சுயநிர்ணய அடிப்படையில் நீதியான, நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்னும் உறுதியோடும் செயலாற்றி வருகிறோம். எனவே, எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் எமது மக்களுக்கான அவசிய, அரசியல் பணிகளை முன்னெடுக்கக்கூடிய ஏதுநிலையை ஏற்படுத்தித் தருமாறு மனித உரிமைகளுக்காகப் போராடும் நாடுகளை அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
எமது அன்பான மக்களே.
நீண்டகாலமாகத் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிடப்படும் கொடூர ஒடுக்குமுறை பற்றியும், இராணுவ அடக்குமுறை பற்றியும், அரசியல் தீர்வுகாணும் விவகாரத்தில் சிங்களப் பேரினவாதம் கடைப்பிடித்துவரும் விட்டுக்கொடாத போக்குப் பற்றியும் சர்வதேச சமூகம் நன்கறியும்.அப்படி இருந்தும் ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் ஒத்திசைவான அரசியல் தீர்வு ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக மேற்குலகம் நம்புகிறது. இந்தப் போலி நம்பிக்கையின் அடிப்படையில் வர்த்தக, பூகோள ஆதிக்க நலன்களே உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த சர்வதேசப் புறநிலை எதார்த்தங்களுக்கு ஏற்பவே எமது போராட்ட வழிமுறைகளை மாற்றியமைக்க
வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தங்கள் எழுந்துள்ளன.
சிங்கள ஆளும் வர்க்கமும் அதற்குப் பக்கபலமாக நிற்கும் பேரினவாதச் சக்திகளும் தமிழ் மக்களுக்கு நீதிவழங்கப் போவதில்லை என்பதையும், நியாயமான தீர்வுக்கு இணங்கப் போவதில்லை என்பதையும் நாம் தொடர்ந்து உலகிற்கு எடுத்துக்காட்டி வரவேண்டும். தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்ய சிங்கள ஆட்சியாளர்கள் தயாரில்லை என்பதைத் தொடர்ந்து உணர்த்துவதன் மூலமே எமது தன்னாட்சி உரிமைப் போராட்டத்திற்கு நாம் உலகத்தின் ஆதரவைத் திரட்டமுடியும்.
போர் முடிந்தும் தமிழருக்கு நீதிவழங்க சிங்கள அரசு மறுத்து, அடக்குமுறை தீவிரமாகி, இரு தேசிய இனங்களும் ஒன்றுபட்டு வாழமுடியாத நிலை தோன்றி, அரசியல் தீர்வு சாத்தியமாகாத நெருக்கடி நிலை எழும்போது, உலக சமுதாயத்தின் ஆதரவு நிச்சயம் தமிழர் சார்பாகத் திரும்பும். இதனை உலக நாடுகள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
நாம் பெரும் மக்கள் சக்தியாக ஒன்றுபட்டு, அணிதிரண்டு போராடி எமது இலட்சியத்தை வென்றெடுப்பதன் மூலம்தான் எமது இனத்தையும் மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றுப் பாரம்பரியங்களையும் தக்கவைக்க முடியும்.
சுதந்திரமான, கௌரவமான வாழ்வை உறுதிசெய்துகொள்ள முடியும். எந்நேரத்திலும் நாம் எமது கோரிக்கைகளை சமரசத்துக்கு உட்படுத்துவதோ, எமது விடுதலை வேட்கையை நீர்த்துப் போகச் செய்வதோ, நழுவற்போக்கைக் கைக்கொண்டு அரைகுறைத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முனைவதோ, எமது இனத்தை அழிவிற்கு இட்டுச் செல்வதாகவே அமையும். இன்றைய சூழ்நிலையில் அரச பயங்கரவாதம்
கூர்மையடைந்து, நவீனமாகக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தமிழீழமெங்கும் அரங்கேற்றப்பட்டு, எமது மனோவுறுதிக்கு சவால்விடும் இந்தச் சூழ்நிலையில், நாம் எமது இலட்சியங்களிலிருந்து வழுவாமல் இருப்பது அவசியம்.
எமது அன்பான மக்களே.
விடுதலைப் போராட்டங்கள், யுத்த நெருக்கடிகள், உள்நாட்டுப் போர்கள் காரணமாக பொதுமக்கள் இடம்பெயர்வதும், அகதிகளாக அவலப்படுவதும் இன்றைய உலகில் தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாக மனிதகுலத்தைப் பாதித்துவருகின்றன.
எமது தேசத்துக்குத் தொண்டாற்றியோர் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு வதைக்கப்படுவதும், அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுவதும், மர்மப் படுகொலைகளுக்கு உள்ளாவதும், தாயகத்தில் வாழமுடியாத நிலைக்குள் தள்ளப்படுவதுமாகத் துயர் சுமந்த ஒரு வாழ்க்கைப் போராட்டமாக அமைந்திருக்கிறது.
இடம்பெயர்ந்தும், அகதிகளாக அல்லற்பட்டும், பசியோடு வாழ்ந்தும், சாவைச் சதா சந்தித்தும்,எத்தனையோ துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் முகங்கொடுத்து, எத்தனையோ நெருக்கடிகளையுஞ் சமாளித்து, என்னதான் நிகழ்ந்தாலும் தாய்மண்ணிலேயே வேரூன்றி நிற்கவேண்டுமென்ற உறுதியோடு வாழும் எமது மக்களே எமது போராட்டத்தின் அச்சாணியாகத் திகழ்கிறார்கள்.
அந்த மக்களின் வாழ்வாதாரத்தைச் சிறப்பிக்க உதவும் பாரிய பொறுப்பு இன்று எமது புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
எமது அன்பான மக்களே.
சர்வதேச மயப்பட்ட இன்றைய எமது போராட்டக் களத்தில், எமது மக்களின் விடுதலையை முன்னெடுக்கும் மாபெரும் வரலாற்றுப் பொறுப்பு எமது இளந் தலைமுறை, புத்திமான்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அரசியல் அமைப்புக்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், மனிதவுரிமைப் பணியாளர்கள், செயற்பாட்டாளர்கள் என அனைத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் மீதும் சுமத்தப்பட்டிருக்கிறது.
தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து துறைசார்ந்த தங்கள் பணிகளை அயராதும் ஊக்கத்தோடும் நம்பிக்கையோடும் முன்னெடுக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
நாம் எமது பிறப்புரிமைக்காக, எமது தேசிய உரிமைக்காக, எமது அரசியல் தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமைக்காகப் போராடுகிறோம். எமது போராட்டம் நியாயமானது. இனவழிப்புச் செய்துவரும் ஓர் அரசுடன் சமாதான சகவாழ்வு சாத்தியப்படாது. ஆகவே நாம் தனியரசு கோரிப் போராடுவதில் எந்தத் தவறும் இல்லை. இந்த இலட்சியத்துக்காக பல ஆயிரக்கணக்கான இளம் போராளிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.
பல இலட்சம் அப்பாவி மக்கள் செத்து மடிந்தனர்.
நீண்டகாலமாக உயிரிழப்பாகவும் உடைமை அழிவாகவும் நாம் சந்தித்த பேரிழப்புகளும் எமது போராளிகளின் உன்னதமான தியாகங்களும், எமது மக்கள் வடித்த இரத்தக் கண்ணீரும் ஒருபொழுதும் வீண்போகாது. ஒரு வீரஞ்செறிந்த விடுதலை வரலாற்றின் அற்புதமான அர்ப்பணிப்புகளாக அவை மகிமைபெறும். ஒருநாள் எமது இலட்சியம் நிறைவேறும். அப்பொழுதுஎமது மண்ணுக்காக உயிர் நீத்த மாவீரர்கள் ஒரு சுதந்திரத் தாயகத்தின் சிற்பிகளாக வரலாற்றில் இடம்பெறுவர்.
எத்தனை சவால்கள் வந்தாலும், எத்தனை பின்னடைவுகள் வந்தாலும் நாம் எமது இலட்சியத்தில் உறுதி பூண்ட உலகத்தமிழ் மக்கள் சக்தியாக ஒன்றிணைந்து போராடி, தமிழீழத் தாயகத்தை மீட்டெடுப்போமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.
புலிகளின் “ தாகம் தமிழழீ த் தாயகம்.”
தலைமைச் செயலகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.