அஞ்சலி செலுத்த அனுமதிக்காவிடின் அது பயங்கரவாதத்திற்கு வித்திடும் - விக்ரமபாகு
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் அனுமதிக்காவிட்டால் அது பயங்கரவாதத்திற்கு வித்திடும் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் இயக்கத்தினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதனை அரசாங்கம் தடை செய்யக் கூடாது. ஜே.வி.பி.யின் தலைவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்படுவது போன்று பிரபாகரனுக்கும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் சட்டம் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானதுடன், எந்தவொரு இன சமூகமும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படக் கூடாது.சிங்கள மக்கள் உயிர் நீத்தவர்களை நினைகூர்ந்து அஞ்சலி செலுத்த முடியுமாயின் ஏன் தமிழ் மக்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகின்றது.?
உயிரிழந்தர்களுக்கு அஞ்சலி செலுத்துவதனால், அவர்களின் கொள்கைகளை பின்பற்றுவது என்று அர்த்தமாகாது.இவ்வாறான ஒரு நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்காமை அவர்களை பயங்கரவாதம் நோக்கியே நகர்த்தும்’ என்றும் கூறினார்.