மாவீரர் தினம் அனுஷ்டித்தால் கடும் நடவடிக்கை வேண்டும்! அரச தரப்பு எம்.பிக்கள் போர்க்கொடி
விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்து மாவீரர் தினம் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்படுமாயின், அதற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது.
மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதானது நாட்டின் சட்டத்திட்டத்துக்கு முரணான செயல் என்பதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மாவீரர் தினம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
இலங்கைக்கு என தனித்துவமான சட்டங்கள் உள்ள. அந்தச் சட்டத்தை மீறி யாரேனும் செயற்படுவார்களாயின் அது தேசத் துரோகக் குற்றமாகும்.அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும் சட்டம் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்றார்.
இதேவேளை, தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உட்பட உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் இன்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர் உரிமைக்காகக் களமாடி மடிந்தவர்களை நினைவுகூருவதற்காக, மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழர் தாயகப் பிரதேசத்தில் மாவீரர் நாள் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படவில்லை.
தமிழர்கள் புலம்பெயர்ந்து பரவி வாழும் தேசங்கள் எங்கிலும் அது அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. எனினும், இந்த வருடம் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் மாவீரர் நாளை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.