உறவுகளை நினைவுகூரும் உரிமையை தடுக்கக்கூடாது – தமிழ் அரசியல் தலைவர்கள் கோரிக்கை
மரணித்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்கக் கூடாது என்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில், மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. இந்த நிலையிலே, தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்-
“இந்த நாடு ஜனநாயக நாடு என்றால் இது நல்லாட்சி என்றால் தமிழ் மக்கள் தங்கள் எண்ணங்களை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்றுகூடுவதற்கும், மரணித்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கும் சுதந்திரம் உள்ளது.
தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது முக்கியமானதாக விளங்குகிறது. எனவே, தமிழர்கள் மரணித்த தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி – அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது.
இதனை எவராவது தடுத்தால் அது பாரிய மனித உரிமை மீறலாகும். மரணித்தவர்கள் மதிக்கப்படவேண்டும். அவர்களை நினைவுகூருவதைத் தடுக்க முயல்வது தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்றும், நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்துவிடும் என்றும் இந்த அரசுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றேன்”
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி-
1989ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் நாளை, கால்நூற்றாண்டுக்கு மேலாக மாவீரர் நாளாக சில சமய நிகழ்வுடன் கொண்டாடப்பட்டு வருவதை தடுப்பது அரசாங்கத்தின் புத்திசாதுரியமான செயலன்று.
அன்று தொட்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்களால் அந்தந்த இடத்தில் வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறியதாகவோ பெருமளவிலோ இந் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
பல இளைஞர்கள் சரியாகவோ பிழையாகவோ தாம் ஒரு பெறுமதிமிக்க தேவைக்காக தம் உயிரை அர்ப்பணிப்பதாக கருதினர். இந்த இளைஞர்களின் உறவுகளை பொறுத்தவரை அவர்கள் பெரும் நல்ல நோக்கத்துக்காகவே தம் உயிரை அர்ப்பணித்துள்ளனர் என கருதுகின்றனர்.
இந்த உறவினர்களை புலி ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணமுடியாது. தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதாகவும் அவர்களுக்காகவும் அவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் சில சமய கிரியைகள் செய்வதாகவே கருதுகின்றனர்.
இந்நிகழ்வு ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் அரசாங்கம் கூட இந்த மக்களுடைய உரிமையில் தலையிடக் கூடாதென்று கருதுவதே நியாயமானதாகும்.
யுத்தம் முடிவுக்கு வந்துள்ளமையாலும் சமாதானம் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்பதனாலும் இவர்களுடைய இந்த நிகழ்வுகளில் அரசாங்கம் தலையிட வேண்டாமென விநயமாக வேண்டுகிறேன். – என்றுள்ளது.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா-
கடந்த கால யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை அவர்களது அனைத்து உறவுகளுக்கும் இருக்க வேண்டும். இதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் என்ற நிலை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
அதேநேரம், உயிரிழந்த உறவுகளுக்கான சமய அனுஸ்டானங்களை மேற்கொள்ள வசதியாக வடக்கின் ஓமந்தைப் பகுதியில் ஒரு பொதுவான இடத்தில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும். ஒரு பொது தினத்தை இறந்த உறவுகளின் நினைவு நாளாகப் பிரகடனப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்-
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உயிர் நீத்த போராளிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் நாம் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்.
இதற்கான உரிமை சகல தரப்பினருக்கும் உண்டு என்பதால் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை இராணுவத்தினரும் பாதுகாப்புத் தரப்பினரும் தடுப்பதற்கு முற்படக்கூடாது.