தற்கொலை செய்வதனால் எவரும் விடுவிக்கப்படப்போவதில்லை - அமைச்சர் வீரக்கொடி
விடுதலைப் புலிகளையோ அவ் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையோ நினைவுகூர இலங்கையில் அனுமதி இல்லை. அதையும் மீறி நினைவுகூர்ந்தால் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
தமிழ் கைதிகளை விடுவிக்க பொதுமக்கள் தற்கொலை செய்வது வருத்தமளிக்கும் செயலாகும். இவ்வாறு தற்கொலை செய்வதனால் எவரும் விடுவிக்கப்படப்படப்போவதுமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை க் காரியாலையத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தினை இலங்கையில் எவரும் அங்கீகரிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தை ஜனநாயகத்தை விரும்பும் எவரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தை சர்வதேச நாடுகள் பயங்கரவாத செயற்பாடாகவே சுட்டிக் காட்டு
கின்றன. பல நாடுகளில் இன்றும் புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாத அமைப்பை நியாயப்படுத்தும் எந்த செயற்பாடுகளையும் அனுமதிப்பது என்பது சாத்தியமற்றதாகும்.
அதேபோல் எமது நாட்டில் வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்கள் உள்ளன. நீதிமன்ற தீர்மானங்கள் உள்ளன. இலங்கையின் உயர் நீதிமன்ற தீர்மானத்தின்படி விடுதலைப்புலிகள் இயக்கம் நாட்டில் செயற்பட தடைசெய்யப்பட்டடுள்ளது. அவ்வாறாயின் அவ் இயக்கத்தைச் சார்ந்த எவரையும் நாட்டில் நினைவுகூர முடியாது என்பதே அர்த்தமாகும். ஆகவே விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் நினைவுகூரும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை வடக்கில் அனுஷ்டிக்க அனுமதிக்க முடியாது. அதையும் மீறி எவரும் புலிகளை நினைவுகூர்ந்தால் சட்டரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் யுத்த காலகட்டத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகள் பயங்கரவாதிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆகவே அவர்களை பயங்கரவாதிகள் என்ற ரீதியில் தான் தடுத்து வைத்துள்ளோம். எனவே அவர்களை விடுவிக்க வேண்டுமாயின் மீண்டும் நீதிமன்ற விதிமுறைகளை நாடி அதற்கமைய செயற்பட வேண்டும். அவ்வாறு இருக்கையில் வடக்கில் பாடசாலை மாணவன் ஒருவர் இந்த கைதிகளை விடுதலை செய்யக்கோரி தற்கொலை செய்துள்ளார் என்றால் அதை நினைத்து நாம் வருத்தப்படுகின்றோம். அந்த மாணவனின் மனநிலையை எண்ணி நான் கவலைப்படுகின்றேன். ஆனால் அவனின் இறப்பு மூலம் நாட்டில் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் கைதிகளை விடுதலை செய்ய முடியாது.
இவ்வாறு நாட்டுக்கு எதிராக செயற்பட்டவர்களை காப்பாற்ற அப்பாவிகள் தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது. அதேபோல் இவ்வாறு தற்கொலை செய்வதனால் எவரும் விடுவிக்கப்படப்படப்போவதுமில்லை. சட்டத்திற்கு உயிர் நிகரல்ல என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.