மாவீரர் நாள் - தெற்கில் ஜே.வி.பிக்கான உரிமை வடக்கு மக்களுக்கு வழங்குக!
தெற்கில் ஜே.வி.பி. கட்சிக்கு அவர்களின் கொல்லப்பட்ட தலைவர் மற்றும் கட்சி உறுப்பினர்களை நினைவுகூர்வதற்கு உரிமை இருக்குமாயின், அந்த உரிமையை வடக்கு கிழக்கு மக்களுக்கும் வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளை அனுஷ்டிப்பது சட்டவிரோதமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும், உயிரிழந்த தமது உறவுகளை அனுஷ்டிப்பதற்கு தமிழர்களுக்கு ஜனநாயக உரிமை இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளில் கூடும் லட்சக் கணக்கான மக்களுக்கு எதிராக பொலிஸாருக்கு நடவடிக்கை எடுக்க முடியும் என தான் நம்பவில்லை என்றும், இந்த நிகழ்விற்குத் தான் தலைமையேற்கவுள்ளதாகவும், இதற்கான ஒத்துழைப்பை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.