Breaking News

மக்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது: சிவில் சமூக பிரதிநிதிகள்

தமிழ் மக்கள் தங்களை தாமே ஆளக்கூடிய வகையில் அதிகார பகிர்வு அரசியல் யாப்பில் இடம்பெற வேண்டுமென தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சிவில் சமூக பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ். வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சமூக பிரதிநிதிகள் நடாத்திய நிலையான அரசியல்தீர்வு பற்றிய எண்ணப்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தும் கலந்துரையாடல் கடந்த 3 நாட்கள் நடைபெற்றன. குறித்த கலந்துரையாடலின் பின்னர் நேற்று(புதன்கிழமை) வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தமிழ் பேசும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சிவில் சமூக பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது, தொடர்ச்சியாக சிறுபான்மையினர் மீது அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் தொடர்கிறது என்பது புலப்படுகின்றது. இச்செயற்பாடானது நல்லாட்சி என்று கூறிக்கொள்கின்ற இவ் அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்படுகின்றது. ஆயுத போர் நிறைவுற்று ஏழு வருடங்களை அண்மிக்கின்ற போதிலும், தமிழ் பேசும் மக்கள் மீது ஆயுதமற்ற ஒடுக்குமுறையான போர் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

கடந்த கால ஆயுத யுத்தத்தின் போது, நடைபெற்ற அநீதிகளுக்கும் மிலேட்சத்தனமான உரிமை மீறல்களுக்கும் இதுவரையில் பரிகாரம் வழங்கப்படவில்லை. கடந்த யுத்தத்தின் போது சர்வதேச சட்டங்கள், மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதுடன் அதற்கான பொறுப்புக்கூறலோ நீதிப்பரிகாரங்களோ இதுவரையில் கிடைக்கவில்லை.

காணாமற் போனோர் கடத்தப்பட்டோர் உயிர் இழந்தோர், அரசியல் கைதிகள், ஊனமுற்றோர், உடைமை இழந்தோர், காணிகளை இழந்தோர் தொடர்பில் இதுவரையில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சிவில் சமூக அமைப்புக்கள் மனித உரிமை அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தொடர்ச்சியாக அத்துமீறிய குடியேற்றங்கள் காணி அபகரிப்புக்கள், காடழிப்புக்கள், வளச்சுரண்டல்கள் நடைபெற்றுக்கொண்டே உள்ளது.

தமிழ் பேசும் சமூகம் தமக்கே மொழி கலாசாரம் பண்பாடு பிரதேசம் போன்றவற்றை பாரம்பரியமாக கொண்டுள்ள போதிலும் அவர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீரிகரிக்கப்படவில்லை. தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் தலையீடும் இராணுவத்தின் பொருளாதார செயற்பாடும் எமது பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் முறைமையே காரணமாக இருக்கின்றது. பல்லின மக்கள் சுதந்திரமாக சுய உரிமையோடு பாதுகாப்பாக வாழ முடியாது என்பதனை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கின்றோம். ஆகவே, தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கௌரவத்தோடும் தமக்கே உரித்தான சுயநிர்ணயத்தோடும் தனித் தேசிய இனமாக அங்கிகரிக்கப்பட்டு சுயமாகவும், சுதந்திரமாகவும் வாழக்கூடிய வகையில் தங்களை தாங்களே ஆளும் நிலமைகள் உருவாக வேண்டும்.

இனப்படுகொலை மீண்டும் நடைபெறுவதை தடுப்பதோடு இலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களும் சமத்துவத்தோடும் சமவுரிமையோடும் அச்சமற்ற வகையில் கௌரவமாக வாழக்கூடிய ஒரு சமாதான சூழ்நிலை ஏற்பட வழி வகுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.