மாவீரர் தினம் அனுஷ்டிப்பது சட்டவிரோத செயலாகும் : மஹிந்த
மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டால் அது சட்டவிரோதமான செயலாக அமையுமென்றும், தனி ஈழ கோரிக்கைக்கு நேரடியாக வழிவகுக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வடக்கின் பல பகுதிகளிலும் இதற்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பொலிஸார் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாளைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அரசாங்கம் அனுமதியளிக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டுக்குள் தடை செய்யப்பட்ட அமைப்பிற்காக மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான சுவரொட்டிகள் ஒட்டுவது மற்றும் துண்டுப் பிரசுரங்களை பகிர்வது சட்டவிரோதமான செயலென பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.