மாணவனின் மரணம் – சகலரையும் அமைதி காக்குமாறு சம்பந்தன், மாவை கோரிக்கை
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தற்கொலைச் செய்து கொண்ட மாணவனின் மரணத்தை தொடர்ந்து சகலரும் அமைதி காக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கோரியுள்ளது.
மாணவன் செந்தூரனின் மரணம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-
ஊடகஅறிக்கை
பதினெட்டு வயது மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம்.
அவரது இந்த செயல் சகல தரப்பினாலும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விடயம். அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
இவ்விதமான ஒரு சூழலில் எல்லோரும் அமைதிகாக்க வேண்டியது அத்தியாவசியமான தேவை. எவ்விதமான வன்முறையும் இல்லாமல் எங்களுடைய மனவருத்தத்தையும் அனுதாபத்தையும் நாம் ஒற்றுமையாக தெரிவிப்போம் பகிர்ந்து கொள்ளுவோம்.
இரா. சம்பந்தன், மாவைசேனாதிராஜா