Breaking News

ஆனையிறவு வெளியில் புலிக்கொடி

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று என்ற தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இத்தாக்குதலின் மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வெற்றியை நினைவுபடுத்தும் வகையில் இன்று புலிக்கொடியை பறக்க விட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

அத்தோடு தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.  விடுதலைப் புலிகளின் கொடி 1977ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் போரில் வீரமரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து மாவீரர் நாளில் (நவம்பர் 21 1990) முதல் தடவையாக பிரபாகரனது பாசறையில் ஏற்றி வைக்கப்பெற்றது.

நாட்டைப் போற்றி வணங்குதற்கு ஈடாக தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது.தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது.

எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.