இலங்கையை இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக தாரைவார்க்க அரசு முயற்சி - வீரவன்ஸ குற்றச்சாட்டு
"சீபா" உடன்படிக்கைக்குப் பதிலாக வேறொரு உடன்படிக்கையை இந்தியாவுடன் கையெழுத்திட்டு இலங்கையை இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக தாரைவார்ப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச, ‘தனுஷ்கோடி” ஊடாக இந்தியாவில் தொழில் இல்லாமல் இருப்போர் இலங்கையை ஆக்கிரமிக்கும் ஆபத்தும் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு– செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
இந்தியாவுனுடன் சீபா உடன்படிக்கை செய்து கொண்டபோது இந்தியா எமது பொருளாதாரத்தைக் கைப்பற்றும் ஆபத்து ஏற்படும் இது தொடர்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது எனவே இது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அமைச்சர் மலிக் சமரவிக்ரம முன்னணி வர்த்தக அமைப்பொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவித்தபோது,
இந்தியாவுடன் சீபா ஒப்பந்தம் கையெழுத்திடப்படாது. அதற்கு பதிலாக வேறு பெயரில் வேறொரு உடன்படிக்கை கையெழுத்திடப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் எந்தப் பெயரில் அது கையெழுத்திடப்பட்டாலும் அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆபத்தானதாகும்.
ஒருபுறம் இவ்வாறான உடன்படிக்கையொன்று கையெழுத்திடப்படவுள்ளது. மறுபுறம் தனுஷ்கோடியிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு இலங்கைக்கான தரைவழிப்பாதை அமைக்கப்படவுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இந்தியாவிடம் இலங்கையை தாரை வார்த்து இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக இலங்கை மாற்றப்படும்.அத்தோடு தனுஷ்கோடி ஊடாக இந்தியாவில் தொழில் இல்லாமல் சுற்றித்திரிவோர் தொழிலாளர்களாக இங்கு வரும் ஆபத்தும் உள்ளது.
பல இலட்சக்கணக்கான இந்தியர்கள் இவ்வாறு எமது நாட்டிற்குள் புகுந்தால் எம்மவர்களுக்கு தொழில் இல்லாமல் போய்விடும். அத்தோடு புலம்பெயர் புலிகளுக்கு இங்கு வர சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.