ஐ.நா விசாரணைக்காக யாழ்.மாவட்டத்தில் 2539 முறைப்பாடுகள் பதிவு - யாழ்.அரச அதிபர் தகவல்
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் யாழ்.மாவட்டத்தில் இருந்து 2539 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா. செயற்குழுவினர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச அதிபர் மேலும் கருத்து வெளியிடுகையில்
எதிர்வரும் மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு வரும் ஐ.நா. செயற்குழுவினர் 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதோடு 16 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்படி 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச மக்களிடம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலும் 12 ஆம் திகதி நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச மக்களிடம் வேலணை பிரதேச செயலகத்திலும், 13 ஆம் திகதி வலிதென்மேற்கு சண்டிலிப்பாய், வலி மேற்கு சங்கானை, வலிவடக்கு தெல்லிப்பழை, வலி தெற்கு உடுவில் பிரதேச மக்களிடம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திலும் விசாரணை நடத்தப்படும்.
14ஆம் திகதி கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை பிரதேச மக்களிடம் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும் 15 ஆம்திகதி சாவகச்சேரி பிரதேச மக்களிடம் சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் 16 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலகத்திலும் இந்தக் குழுவினர் விசாரணைகளைமேற்கொள்வார்கள் என்றார்.