வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது- மைத்திரியிடம் மகிந்த அணியினர் கோரிக்கை
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தம்மைச் சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று சிறிலங்கா அதிபரைச் சந்தித்த மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், வரவு செலவுத் திட்ட யோசனைக்ள தொடர்பான தமது கரிசனைகளை வெளியிட்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இணக்கம் காணப்பட்டதாக, சில வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
எனினும், இந்த தகவல்களை சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், மறுத்துள்ளனர்.
வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி சிறிலங்கா அதிபர் எம்மிடம் கோரினார், ஆனால், யாரையும் தன்னால் வாக்களிக்கும் படி அழுத்தம் கொடுக்க முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்றும், அதற்கு ஆதரவாக வாக்களிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் சிறிலங்கா அதிபருக்கு எடுத்துக் கூறினோம். என்றும் அவர் குறிப்பிட்டார்.
இனிமேலும் மௌனமாக இருக்க முடியாது என்று சில உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அதற்கு, சிறிலங்கா அதிபர், உங்களின் உணர்வுகளை என்னால் முழுமையாக உணர முடிகிறது. வரவுசெலவுத் திட்டத்தை விமர்சிக்கும் உரிமையை ஏற்றுக் கொள்கிறேன். இதற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மட்டும் கோருகிறேன். என்னால் அதற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாத மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் 8 பேர் பல்வேறு காரணங்களினால் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.