உயிரிழந்த தமிழ் உறவுகளை நினைவு கூர அனுமதிக்கவேண்டும் - ரில்வின் சில்வா
விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அழுத்தம்கொடுக்கும் அதிகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இல்லை. இப்போது முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியிலான பயணத்தை குழப்பியடிக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். உயிரிழந்த தமிழ் உறவுகளை நினைவுகூர அனுமதிக்க வேண்டும். ஆனால் புலிகளுக்கு மீளவும் உயிர்கொடுக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
நவம்பர் மாதத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யுத்தத்தில் உயிரிழந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மாவீரர்கள் தினத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவது என்பது பொதுவான விடயமாகும். இதில் போராளிகள் மாவீரர்கள் என அனைவருக்கும் அஞ்சலி செலுத்த முடியும். ஆனால் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமா அல்லது தடுக்க வேண்டுமா என்ற கேள்விக்கு சரியான பதிலை எம்மால் தெரிவிக்க முடியாது. யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக தமிழ் மக்கள் தடைகளின்றி அஞ்சலி செலுத்த இடமளிக்க வேண்டும். இதில் தமது உறவுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தனரா அல்லது சாதாரண பொதுமகனா என்பது அநாவசியமான கேள்வியாகும். வடக்கில் அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்க வேண்டும்.
அதேபோல் இன்று நாட்டில் விடுதலைப்புலிகள் என்று எவரும் இல்லை. அனைவரும் சாதாரண பொதுமக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில் எந்தவித செயற்பாடுகளும் இல்லாது சாதாரணமாக செயற்படுவதே பொருத்தமானதாகும். தமது உறவுகளை இழந்துள்ள துயரை புனிதமாக தடைகளின்றி நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்த இடமளிக்க வேண்டும்.
மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை நினைவுபடுத்தி அஞ்சலி செலுத்த அழுத்தம்கொடுக்கும் அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இல்லை. அவர்களும் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரு அரசியல் கட்சியாகும். அதேபோல் இன்று நாட்டில் ஜனநாயகம் வென்றெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அதை தொடர்ந்தும் தக்கவைக்கும் வகையில் அனைவரும் செயற்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.