பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அமெரிக்காவிலுள்ள தேசப்பற்று சட்டமூலத்திற்கு இணையான சட்டமூலமொன்றைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு ஜெனீவா மனித உரிமைப் பேரவை, இலங்கைக்குப் பயணித்த ஐ.நா. பிரதிநிதிகள் குழு ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன.
1982ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி, கடந்த அரசாங்கங்கள், வடக்கில் விடுதலைப் புலிகளுக்கும், தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்கும் எதிராக கடுமையாக செயற்பட்டிருந்தன. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை சுமார் 70 பேர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போனமை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை ஆகிய சம்பவங்கள் குறித்து சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மனித உரிமைக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என கஃபே உள்ளிட்ட பொதுசன அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வகையில் புதிய சட்டமூலமொன்று கொண்டுவரப்படும் என அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.