வடக்கில் சர்வதேச பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும் - விஜயகலா கோரிக்கை
வடக்கில் சர்வதேச பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டுமென உயர் கல்வி அமைச்சரிடம் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிட விடுதி திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோ, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், அமைச்சின் செயலாளர் திஸ்ஸநாயக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மோகன் டீ சில்வா உள்ளிட்டஅதிகாரிகள் கலந்துகொண்டனர்.
குறித்த கட்டடத்திறப்பு விழாவினையடுத்து இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனை-த்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்திருந்தனர்.
அதற்கு கடந்த கால அரசும் இராணுவமும் பொறுப்புக் கூறவேண்டும். தற்போது நல்லாட்சி ஏற்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு தேவைகள் குறித்து அரசு அக்கறை காட்ட வேண்டும் என்றார்.
மேலும் உயர் கல்வி நிலையங்கள் அனைத்தும் தெற்குப் பகுதியிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அவை வடக்கிலும் அமைக்கப்படவேண்டும். குறிப்பாக சர்வதேச பல்கலைக்கழகம் வடக்கில் அமைக்கப்படவேண்டும். இதனூடாக எமது மாணவர்கள் உயர்ந்த பயனை அடைவர் எனத் தெரிவித்தார்.