போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றமில்லை – மைத்திரியிடம் சமந்தா பவர் அதிருப்தி
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் போதிய முன்னேற்றங்களை காண்பிக்காதது குறித்து, அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் நேற்றுக்காலை சந்தித்துப் பேசிய போதே, இதுகுறித்து எடுத்துக் கூறப்பட்டதாக இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய அம்சமான போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யும் விடயத்திலேயே, இலங்கை அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுவதாக அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
போர்க்குற்ற விசாரணை தொடர்பான அடிப்படை வரைவு ஒன்றை தயாரிப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இணக்கம் காணத் தவறியுள்ளது குறித்து சமந்தா பவர் கவலை தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, இலங்கை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த பத்து மாதங்களில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கையூட்டும் நல்லிணக்கப் பாதையில் செல்வதாக சமந்தா பவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நாடுகளின் தலைவர்கள் அதிகாரத்தை வைத்துக் கொள்ள முயற்சிக்கும் நிலையில், தனது அதிகாரங்களை விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலகத் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாகவும் சமந்தா பவர் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி செயலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.