இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா உதவும் – சமந்தா பவர்
இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களை சமந்தா பவர் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்பின் போது, மிக முக்கியமான தருணத்தில், நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளை வலுப்படுத்த உதவ வேண்டும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
சமந்தா பவருடன் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், “இந்தச் சந்திப்பு மிகவும் நன்மை பயக்குமென எதிர்பார்க்கிறோம். அவர் உலகில் மிக வலுவான நாட்டினுடைய பிரதிநிதியாகவும், உலகில் உள்ள மக்கள் அனைவரையும் இணைத்துக் கொள்ளும் பாரிய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாகவும் இருப்பதால், அப்படியான ஒருவருடன் பேச கிடைத்ததை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.
வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களுடன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகவும் கரிசனையுடன் செயற்படுகிறார். இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு, ஜனநாயக நாடான அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்குவதில் மகிழ்ச்சியடைவதாகவும், தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்யப் போவதாகவும் சமந்தா பவர் தெரிவித்தார்.
முன்னர் இருந்த சற்று எதேச்சாதிகாரமான வாழ்க்கை முறை மாற்றமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னைய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சில இயக்கங்களும் மக்களும், அந்த தடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தினர் எம்மத்தியில் இருந்து, எமது வாழ்வாதாரங்களைப் பிடிங்கிக் கொண்டும், காணிகளைப் பிடிங்கிக் கொண்டும். வீடுகளைப் பிடிங்கிக் கொண்டும் இருப்பது எமக்கு தொந்தரவினையும், பிரச்சினையும் தருகிறது.
ஆறு வருடங்களின் பின்னரும், இவ்வாறு நடப்பது எமக்கு மனவருத்தத்தை தருகிறது என்ற கருத்தை அவரிடம் தெரிவித்திருந்தோம். முன்னரை விட படையினர் தற்போது, தமது முகாம்களில் அடைபட்டு இருப்பது உண்மையாக இருந்தாலும், தகவல் சேரிக்கும் பணிகளில் தற்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பயங்கரவாதிகள் என்ற மனோநிலையில், தமிழ் மக்கள் அனைவரையும் உட்புகுத்தி, பயங்கரவாதிகள் என்ற எண்ணத்தில் செயல் புரிந்து வருவது எமக்கு வேதனை தருகிறது என்றும் அவரிடம் குறிப்பிட்டோம்.
பாதுகாப்புக்காக மிகப்பெரியளவு நிதியை பாதீட்டில் வழங்குவதாகவும், இவற்றை எமக்கு நன்மை பயக்க கூடிய வகையில் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்றும், மற்றைய மாகாணங்களை விட பின்தங்கிய நிலையில் இருப்பதால், எமக்கு கூடிய உதவிகள் தேவை என்பதனையும் எடுத்துக் கூறினோம்.
இத்தகைய விடயங்களை எடுத்துக் கூறிய போது அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.உங்களின் பிரச்சினைகளை நன்றாக உணர்ந்து கொள்கிறோம். சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்து உங்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுப்போம் என்ற உத்தரவாதத்தை தந்தார்,” என்று குறிப்பிட்டார்.