Breaking News

இலங்கை வரும் சமந்தா பவர் தமிழ்க் கூட்டமைப்புடன் முக்கிய பேச்சு

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவரும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியமானவருமான சமந்தா பவர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கை வருகின்றார். 

இவர், இலங்கை விஜயத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். இந்தத் தகவலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உறுதிப்படுத்தினார்.

இந்த விஜயத்தின்போது வடக்கிற்கும் அவர் செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதுடில்லியிலுள்ள தாஜ்மஹால் ஹோட்டலில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள ‘உலகில் பெண்கள்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகைதரவுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், இந்தியாவில் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த மாதம் 28ஆம் திகதி மெக்ஸிகோ நகரில் இடம்பெற்ற திறந்த அரசுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய சமந்தா பவர், இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறியதுடன், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில், நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ , பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர்  பிரசாத் காரியவசம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தமையும் சுட்டிக்கட்டத்தக்கது.