அட்மிரல் கரன்னகொடவை கைது செய்ய வேண்டும் – சுமந்திரன்
திருகோணமலைக் கடற்படைத் தள இரகசிய வதைமுகாம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட போன்றவர்களை கைது செய்து விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், “திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் உள்ள நிலத்தடி சிறைக் கூடங்கள் ஆட்களைத் தடுத்து வைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட வெளியிட்டுள்ள கருத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரித்தானியர் காலத்து சிறைக் கூடத்தை சந்தேக நபர்களை தடுத்து வைப்பதற்கு தாம் பயன்படுத்தியதாகவும், ஆனால் அவர்களை சித்திரவதை செய்யவில்லை என்றும் அட்மிரல் கரன்னகொட ஊடகவியலாளரிடம் கூறியிருக்கிறார்.
இந்த வதை முகாம் தொடர்பாக அட்மிரல் வசந்த கரன்னகொட கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். அவர் இப்போது சுதந்திரமாகத் திரிகிறார். இது எப்படிச் சாத்தியம்?, அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் தற்போது எங்கே உள்ளனர், அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனரா என்று அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். திருகோணமலை வதை முகாம் போன்ற இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய தகவல்கள் தெரிய வந்து விடும் என்பதால் தான், முன்னைய அரசாங்கம் ஐ.நா பணிக்குழுவை சிறிலங்காவுக்கு அனுமதிக்கவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.