Breaking News

நீதி, பொறுப்புக்கூறல் பாதையில் இலங்கை பயணிக்க வேண்டியது முக்கியம் – சமந்தா பவர்

நீதி, பொறுப்புக்கூறல் பாதையில் இலங்கையின் தலைவர்கள் பயணிக்க வேண்டியது முக்கியம் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் கொழும்பு வந்த அவர், நேற்றிரவு இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சுக்களை நடத்தினார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சில் நடந்த இந்தப் பேச்சுக்களின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள சமந்தா பவர், “ 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இலங்கைக்கு வந்துள்ளேன்.

ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.தலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கிய பயணத்தைத் தொடர வேண்டும்.

இலங்கை மக்களின் மனித உரிமைகள் சார்பாகவும், பொறுப்புக்கூறல் மற்றும் மறுசீரமைப்புக்கான அரசாங்கமாகவும், செயற்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.