Breaking News

இன்று கொழும்பு வரும் சமந்தா பவர், நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம்

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் மூன்று நாள் பயணமாக இன்று இலங்கைக்கு வரவுள்ளார். நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ள அவர், நாளை மறுநாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.


இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று கொழும்பு வரவுள்ளார். இன்று அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நாளை யாழ்ப்பாணம் செல்லும் அவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைச் சந்தித்துப் பேசுவார். அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டோர், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

ஒஸ்மானியா கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ள சமந்தா பவர்,  யாழ்.பொது நூலகத்துக்கும், உதயன் நாளிதழ் பணியகத்துக்கும் செல்லவுள்ளார். நாளை மறுநாள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரைச் சந்தித்து அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவை நாளை மறுநாள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் சமந்தா பவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தப் பேச்சுக்களில் கூட்டமைப்பின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், மாவை.சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன்  மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.