இலங்கையில் சித்திரவதைக்கூடங்கள், சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்: ராமதாஸ்
இலங்கையில் சித்திரவதைக்கூடங்கள் இயங்கி வந்ததாக ஐ.நா நிபுணர் குழு தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சித்திரவதைக்கூடங்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலையிலுள்ள கடற்படை தளத்தினுள் சித்திரவதைக்கூடம் இரகசியமாக செயற்பட்டு வந்ததை ஐ.நா குழு கண்டறிந்துள்ளதாகவும் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து ஓராண்டு வரை இந்த சித்திரவதைக்கூடம் செயற்பட்டு வந்ததாகவும், அங்கு ஏராளமானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் ஐ.நா. குழு குறிப்பிட்டுள்ளதாகவும் பாட்டாளி மக்கள் கட்யின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா குழுவிற்கு குறுகிய காலமே விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் முழுமையான உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சித்திரவதைக்கூடம் செயற்பட்டு வந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கவில்லை எனவும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.