குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணை – பாதுகாப்புச் செயலர் உறுதி
தனது பொறுப்பில் உள்ள நிறுவனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் நடத்தப்படும் என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின், உயர்மட்ட அதிகாரிகள் 200 பேர் பங்கேற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்ட பின்னர், கருணாசேன ஹெற்றியாராச்சி முதல் முறையாக நேற்று காலை இராணுவத் தலைமையகத்துக்கு சென்றிருந்தார்.
அவரை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். அங்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மேஜர் ஜெனரல், பிரிகேடியர் பதவி நிலைகளில் உள்ள இராணுவ அதிகாரிகள் 200 பேர் மத்தியில் பாதுகாப்புச் செயலர் உரையாற்றினார்.
இதன் போது அவர், “எனது பொறுப்பின் கீழ் உள்ள நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் நடத்தப்படும். தேசிய அளவில் பல்வேறு புதிய சவால்களுக்கு முகம் கொடுக்கும் போது, பின்பற்றுவதற்கான ஒரு மூலோபாய பாதுகாப்பு அனுமதிக் கொள்கை ஒன்றின் முக்கியத்துவத்தை ஆயுதப் படைகளின் நிலையில் இருந்து, புரிந்து கொண்டுள்ளேன்.
நாம் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் போது, நம்பகமான விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் நிச்சயமாக அந்தப் பி்ரச்சினைகளை தீர்க்க முடியும். நாம் அவ்வாறு செய்யத் தயார். ஏனென்றால் நாம் நினைப்பது போது பிசாசு ஒன்றும் அவ்வளவு கொடூரமானது அல்ல.
நாம் அனைவரும் குழுவாகப் பணியாற்ற வேண்டும். இராணுவம் ஒழுக்கமுடையதாக இருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.