Breaking News

வரவுசெலவுத் திட்ட அமர்வின் சுவாரசியங்கள் (படங்கள் இணைப்பு)

 
2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 2.03 மணியளவில் வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பித்து, மாலை 6.24 மணியளவில் முடிவுக்கு வந்தது. வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் சில சுவாரசிய சம்பவங்கள், விடயங்கள்-

*முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச நேற்று மிகத் தாமதமாகவே சபைக்கு வந்தார். வரவு – செலவு திட்ட உரை ஆரம்பித்து சுமார் இரண்டேமுக்கல் மணி நேரம் கழித்து, மாலை 4.55 மணியளவில் அவர் சபைக்கு சமுகமளித்தார். அரை மணிநேரமே சபையில் இருந்த அவர், மாலை 5.25 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். எழுந்து செல்லும் போது, தனது அருகில் அமர்ந்திருந்த எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் தோளில் இலேசாகத் தட்டிவிட்டுச் சென்றார்.

* நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவு செலவுத் திட்ட உரை சுமார் நான்கரை மணிநேரம் நீடித்தது. சுமார் நான்கரை மணி நேரமும் நின்று கொண்டே வரவு செலவுத் திட்டத்தை தெளிவுபடுத்தினார். முன்னாள் நிதியமைச்சர் றொனி டி மெல் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். றொனி டி மெலுக்குப் பின்னர் ரவி கருணாநாயக்கவே இவ்வாறு அதிக நேரத்தைச் செலவழித்து வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

.* வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது. ஆளும் கட்சியின் சார்பில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். எனினும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சபையில் இருக்கவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறுமையாகவே இருந்தன.

* வரவு செலவுத்திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து அதனை அவதானித்துக் கொண்டிருந்தார். வரவு செலவுத்திட்ட உரை நீண்டுசெல்ல அவர் சில அமைச்சர்களுடன் தேநீர் அருந்தி விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

* நேற்றைய வரவு செலவுத் திட்ட அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தாமதமாக – பி.ப 2.20 மணியளவில் சபைக்கு வந்தார்.

* தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தைக் அவதானிப்பதற்காக வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளும் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தனர்.

* நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நிதியமைச்சினால் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேநீர் விருந்துபசாரம் வழங்குவது வழக்கம். நிதியமைச்சு ஒழுங்கு செய்திருந்த தேநீர் விருந்துபசாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த அநேகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும் சிலர் பங்கேற்கவில்லை.