இலங்கை கடற்படையுடனான உறவுகளை துண்டிக்க வேண்டும் – அனைத்துலக அமைப்பு கோரிக்கை
இலங்கை கடற்படையின் திருகோணமலை தளத்தில் இரகசிய தடுப்பு முகாமை, ஐ.நா குழு கண்டறிந்துள்ளதையடுத்து, இலங்கையுடனான கடற்படை ஒத்துழைப்புகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்று உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் கோரியுள்ளது.
தென்னாபிரிக்காவின் மனித உரிமைகளுக்கான பவுண்டேசனுடன் இணைந்து செயற்படும், உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பே, திருகோணமலையில் உள்ள டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் இரகசியத் தடுப்புமுகாம் ஒன்று இருப்பது பற்றிய தகவல்களை செய்மதிப்பட ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தது.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவினர், இந்த இரகசிய தடுப்பு முகாமைப் பார்வையிட்டு உறுதி செய்துள்ள நிலையிலேயே, இலங்கை கடற்படையுடான உறவுகளை வைத்திருக்கும் நாடுகள் அதுபற்றி மீளாய்வு செய்ய வேண்டும் என்று, உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகள், பயிற்சிகளை மேற்கொள்ளும் நாடுகள், அதனை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த அமைப்பு கோரியுள்ளது. உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம்- இலங்கை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக அனைத்துலக மனித உரிமை நிபுணர் ஜஸ்மின் சூகா பணியாற்றி வருகிறார்.
இவர், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்க, 2010ஆம் ஆண்டு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.