பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டது போன்றதே வரவு–செலவுத் திட்டம்! விமர்சிக்கிறார் பந்துல
தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவானது அலங்கோலமான பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு அவனை அலங்கரித்துவிட்டதைப் போன்று அமைந்திருப்பதாக மஹிந்த அணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
2016ஆம் நிதி ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ் வரவு செலவு திட்டம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு விமர்சித்துள்ளார்.
இங்கு ஊடவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,
அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எதுவித சலுகைகளும் வழங்கப்படவில்லை என்பதே எனது கருத்தாகும். மேலும் நெல் மற்றும் இறப்பர் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவித நிவாரணங்களும் இவ்வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.
இவ் வரவு செலவு திட்டம் குறித்து மிகச் சுருக்கமாக கூறுவதாயின் "அலங்கோலமாக திரியும் பிச்சைக்காரனை பிடித்து அவனுக்கு பவுடர் போட்டு அலங்கரித்து விட்டதைப் போன்றதாகவே அமைந்திருக்கிறது" அதனைவிடுத்து வேறு எதனையும் இங்கு கூற முடியாது என தெரிவித்துள்ளார்.