அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப் போகிறதாம் அமெரிக்கா!!
அழுத்தங்களைக் கொடுத்து தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்க ஒத்துழைப்பு வழங்குவோம் என அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சமந்தா பவர் தன்னிடம் தெரிவித்தார் என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்த அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சமந்தா பவர் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "எமது சந்திப்பு மிகவும் நன்மை பயக்குமென எதிர்பார்க்கின்றோம்.
உலகில் மிக வலுவான நாட்டினுடைய பிரதிநிதியாகவும் உலகில் உள்ள மக்கள் அனைவரையும் அணைத்துக்கொள்ளும் பாரிய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக இருப்பதால் அப்படியான ஒருவரின் சந்திப்பும் அவருடன் பேசக் கிடைத்ததும் பெரிய வாய்ப்பாக கருதுகின்றேன். வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் விடயத்தில்அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றார்’. அந்த செய்பாட்டின் நிமித்தம் தான் சமந்தா இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி கூறிய வார்த்தைகளை கூற வேண்டுமென்பதுடன் இலங்கையில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அமெரிக்காவும் ஜனநாயக நாடு என்பதில் இலங்கையுடன் சேர்ந்து ஒத்துழைப்பதில் அமெரிக்கா சந்தோசப்படுவதாகவும் தம்மாலான சகல உதவிகளையும் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். முன்னர் இருந்த எதேச்சதிகாரமான வாழ்க்கை முறை மாற்றமடைந்து வருகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்திலும் இதுவரை மாற்றங்கள் ஏற்படாது என்ற மன நிலையில் மக்கள் இருப்பதை தான் அறிந்து கொண்டுள்ளதாக கூறியது சமந்தா சற்று தாமதமாகினாலும் பலவித நன்மைகளைப் பெற தான் சகல நடவடிக்கைகளும் எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சில இயக்கங்களும் மக்களும். அந்த தடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டினார். அதனை மெதுவாகச் செய்ய வேண்டி இருப்பதாகவும், பல விடயங்களில் முன்னைய அரசாங்கத்தினுடைய அலுவலர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் எந்தவொரு நடவடிக்கையும் தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் சார்பில் நடைபெற்றாலும் அதை பெரிதுபடுத்தி ஏதோ சிங்கள மக்களுக்கு சார்பில்லாத நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிடுவது வழக்கமாக இருக்கின்றது என்றும் தாம் எதை அரசாங்கத்திற்கு கூறினாலும் தாமதமாகுவதற்கு அதுவும் ஒரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.
இலங்கையில் எந்தவொரு விடயத்தினைத் தொடங்கினாலும், மிகவும் தாமதப்படுத்தித் தான் எல்லா விடயத்தினையும் முடித்துக் கொடுக்கின்றார்கள். எந்த விடயமாக இருந்தாலும் உடனுக்குடன் செய்து முடிக்கும் தன்மை இந்த நாட்டில் இல்லையெனக் கூறியுள்ளார். தாம் உடனுக்குடனேயே எந்தவொரு காரியத்தினையும் செய்ய முற்படுவதாகவும் அது கூட போதாது என தாம் கூறுவதை நினைவுபடுத்திக் கொண்டதுடன் இங்கு நடைபெறும் காரியங்கள் தாமதப்படுத் தினாலும் பல விதங்களில் நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். எம்மைப் பொறுத்தவரையில் எம்மைப் பீடித்திருக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இராணுவத்தினர் எம்மத்தியில் இருந்து எமது வாழ்வாதாரங்களைப் பிடுங்கிக்கொண்டும் காணிகளைப் பிடுங்கிக்கொண்டும். வீடுகளைப் பிடுங்கிக்கொண்டு இருப்பது எமக்கு தொந்தரவினையும் பிரச்சினையையும் தருகின்றது.
ஆறு வருடங்களின் பின்னரும் இவ்வாறு நடப்பது எமக்கு மனவருத்தத்தினைத் தருகின்றது என்ற கருத்தினை தெரிவித்திருந்தோம். முன்னையதையும் பார்க்க தற்போது தமது முகாம்களில் அடைபட்டு இருப்பது உண்மையாக இருந்தாலும் தமது தகவல் சேகரிக்கும் பணிகளில் தற்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் பயங்கரவாதிகள் என்ற மனோநிலையில் தமிழ் மக்கள் அனைவரையும் உட்புகுத்தி, பயங்கரவாதிகள் என்ற எண்ணத்தில் செயல்புரிந்து வருவது எமக்கு வேதனை தருகின்றது என்ற கருத்தினை முன்வைத்திருந்தோம். பாதுகாப்பின் நிமித்தம் தற்போது கூட மிகப்பாரிய தொகையினை பட்ஜெட்டில் வழங்குவதாகவும் இவற்றை எல்லாம் எமக்கு நன்மை பயக்க கூடிய வகையில் பணத்தினை பகிர்ந்து கொண்டிருக்கலாம் தானே என்றும் மத்திய மாகாணத்தினை விட பின்தங்கிய நிலையில் இருப்பதால், எமக்கு கூடிய உதவிகள் தேவை என்பதனையும் எடுத்துக் கூறினோம். இவ்வாறு பல விடயங்களை எடுத்துக் கூறிய போது அவர் அவற்றினை ஏற்றுக்கொண்டார். அதேவேளை, உங்களின் பிரச்சினைகளை நன்றாக உணர்ந்து கொள்கின்றோம். அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுத்து உங்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுப்போம் என்ற உத்தரவாதத்தினையும் தந்தார்" -என்றார்.