முடிவுக்கு வந்தது அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்
தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டமானது, இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுவிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு இணங்கி, அவர்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் தம்மை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது இம்மாதம் 7ஆம் திகதிக்குள் தீர்வு வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்தபோதும், எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்றுவரை 39 கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, 90 அரசியல் கைதிகளுக்கு கட்டம் கட்டமாக புனர்வாழ்வளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.