Breaking News

வவுனியா அரச அதிபராக மீண்டும் சிங்களவர்

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக, சிறைச்சாலைகள் ஆணையாளராக இருந்த ரோகண புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றிய, பந்துல ஹரிச்சந்திர காலி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் சிங்கள அரசாங்க அதிபர்கள் நி்யமிக்கப்பட்டனர். வவுனியா அரசாங்க அதிபராக இருந்த பந்துல ஹரிச்சந்திர, வடக்கு மாகாண சபை நிர்வாகத்துடன் ஒத்துழைக்க மறுத்ததுடன், மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவமதித்துச் செயற்பட்டு வந்தார்.

மேலும் வவுனியா மாவட்டத்தில் காடுகளை அழித்து சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவும் இவர் துணையாகச் செயற்பட்டிருந்தார். இவரை இடமாற்றம் செய்யக் கோரி, வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், சபை உறுப்பினர்கள் போராட்டங்களையும் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே பந்துல ஹரிச்சந்திர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும், மீண்டும் சிங்களவர் ஒருவரையே அரசாங்கம் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வவுனியா மாவட்டத்துக்கு அரசாங்க அதிபராக நியமித்துள்ளது.

வவுனியாவில் அரசாங்க அதிபர்களாக சிங்களவர்களை நியமிக்கும் பாரம்பரியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.