மஹிந்தவிடம் இன்று விசாரணை
பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகள் இன்றுவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகள் இன்று ஆணைக் குழு முன்னிலையில் இடம்பெறவுள்ளது.
சுயாதீன தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பிய விளம்பரங்களுக்குரிய கட்டணம் வழங்காமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக நேற்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. இந் நிலையில் நேற்று காலை மஹிந்த ராஜபக்ஷ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
எனினும் அவர் நேற்று அங்கு ஆஜராகவில்லை. மாறாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களும் மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணியான காமினி மாரப்பனவும் ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகினர்.
இந் நிலையில் நேற்றைய ஆணைக் குழு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணியான காமினி மாரப்பன, தமக்கு சாட்சியங்கள் கிடைக்கவில்லை எனவும் அவை கிடைக்காமல் தம்மால் குறுக்குக் கேள்விகளை சாட்சியாளர்களிடம் கேட்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து ஆணைக் குழுவின் நீதிபதிகள் குழு விசாரணையை இன்று வரை ஒத்தி வைத்ததுடன் சாட்சியங்களை பிரதிவாதி சட்டத்தரணிகளுக்கு உடனடியாக வழங்குமாறு முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டனர்.
அத்தியாவசிய ஆவணங்கள் சிலவற்றை பிரதிவாதி தரப்பிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டமையால் சாட்சி விசாரணைகளை நாளை (இன்று )வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா கேசரிக்கு தெரிவித்தார்.