இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று பிற்பகல் 2 மணியளவில், 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுவார்.
முன்னதாக, இந்த வரவுசெலவுத் திட்டம் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று காலை சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும்.அதேவேளை, நேற்று வரவுசெலவுத் திட்டம் தொடர்பான இறுதி மேற்பார்வை கூட்டம் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது,
இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே இன்று பிற்பகல் வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நாளை காலை ஆரம்பமாகும்.
நாளை தொடக்கம் டிசெம்பர் 2ஆம் நாள் வரை தினமும் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணிவரை இந்த விவாதம் இடம்பெறும். இதன் பின்னர், டிசெம்பர் 3ஆம் நாள் தொடக்கம், 19ஆம் நாள் வரை மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்படும். இதன் முடிவில், வரும் டிசெம்பர் 19ஆம் நாள் மாலை இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஜனவரி 29ஆம் நாள் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது. இந்தநிலையில், புதிய அரசாங்கத்தின் முதலாவது முழு வரவுசெலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.