அனைத்து தமிழ் கிராமங்களின் பெயர்களையும் அகற்றுவோம் - இராவணாபலய எச்சரிக்கை
யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயர் நயினாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் கிராமங்களின் பெயர்களையும் நாம் அகற்றுவோம் என இராவணாபலய அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இராவணாபலய அமைப்பு ஜனாதிபதியை சந்திக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தது. எனினும், ஜனாதிபதியை நேற்று சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி்க்கையிலேயே இராவணாபலய அமைப்பின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இராவணாபலய அமைப்பின் பிரதிநிதிகள் இத்தேகந்த பஞ்ஞார தேரர் மற்றும் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஆகியோர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்
இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் பெயர்களையும் மாற்றம் செய்வதற்கு எம்மிடம் ஆட்பலம் இருக்கின்றது. விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுதலை செய்வது நாட்டை மீண்டும் யுத்தத்தை நோக்கி தள்ளும் நடவடிக்கையாகும்.நாகதீப என்ற பெயரை வடக்கு மாகாண சபை நயினாதீவு என்று மாற்றம் செய்தால், அது நாட்டை இனவாதத்தை நோக்கி இட்டுச் செல்லும் நடவடிக்கையாகும்.
மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வதானது நாட்டை மீணடும் யுத்தத்தை நோக்கி தள்ளுவதாகும்.அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, தவறு செய்திருந்தால் தண்டனை வழங்க வேண்டும். தவறு செய்யவில்லை என நிரூபிக்கப்பட்டால் விடுதலை செய்யலாம்.
கே.பி, கருணா ஆகியோரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயர் நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் கிராமங்களின் பெயர்களையும் நாம் அகற்றுவோம் என்றனர்.