Breaking News

தமிழ் சிறைக் கைதிகளில் 20 பேருக்குத்தான் புனர்வாழ்வாம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் பொறிமுறையின் கீழ் சட்டமா அதிபர் முதற்கட்ட குழுவினர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அது பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக இக்குழுவினரில் உள்ளடங்குவோர் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு சிறிய தண்டனைக் காலம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்தே புனர்வாழ்வுக்குச் செல்ல முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவருக்கு பல வழக்குகள் காணப்படுகின்றமையால் ஒரு வழக்கின் அடிப்படையில் புனர்வாழ்வு பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்ற போதும் ஏனைய வழக்குகள் தொடர்பில் தீர்ப்பு அல்லது எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை அறிவிக்கப்படாத நிலையில் அவர்கள் புனர்வாழ்வு பொறிமுறைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இருபது பேரில் மூவரே புனர்வாழ்வுக்குச் செல்லக் கூடிய நிலை காணப்படுகின்றது. 

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகளை ஒருவருடத்திற்கு உட்பட்டதான புனர்வாழ்வுப் பொறிமுறைக்கு உட்படுத்தி விடுதலை செய்வதெனவும் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னதான முதற்கட்ட குழுவினர் வவுனியாவில் அமைந்துள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்­தது.


கடந்த திங்கட்கிழமையன்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, மற்றும் சட்டமா அதிபர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கெடுத்த முக்கிய கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததையடுத்து விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்த தமிழ் அரசியல் கைதிகள் போராட்டத்தை இடைநிறுத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் புனர்வாழ்வு பொறிமுறைக்கு உட்படுத்தப்படவுள்ள இருபது தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குகள் காணப்படும், பாலச்சந்திரன் புஷ்பராஜ், முகமட் இம்ரான்கான், குலசிங்கம் கோகுலராஜ் ஆகியோரும் கண்டி மேல் நீதிமன்றில் வழக்குகள் காணப்படும், விமலசிங்கம் தனயுகன், சுந்தரமணி சிவகுமார், சூரியமூர்த்தி ஜீவோஷன் ஆகியோரும் இதேமன்றில் ஒரே வழக்குடன் தொடர்புடைய, விஷ்வநாதன் ரமேஷ்குமார், இராமநாதன் நவநீதன், தட்சணாமூர்த்தி செல்வகுமார், வேலு யோகராஜா, டேவிட் சுரன்ஜித், கிரிஷாந்த பெர்னாண்டோ, கோவிந்த சாமி சுந்தரமணி ஆகியோரும் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குகள் காணப்படும் அஜித் பொன்சேகா, குலசிங்கம் கோகுலராஜ், குழந்தைவேல் தயாபரன், கார்த்திகேசு நாதன் ஆகியோரும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குகள் காணப்படும், இராமசாமி கிருஷ்ணகாந்தன், இராசலிங்கம் பார்த்தீபன் ஆகியோரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள குணரத்தினம் கஜேந்திரன் சூரிய காந்தி ஜெயச்சந்திரன் ஆகியோரும் முதற்கட்ட புனர்வாழ்வு பொறிமுறைக்கு அனுப்படவுள்ள குழுவினரில் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பாலச்சந்திரன் புஷ்பராஜ், முகமட் இம்ரான்கான், குலசிங்கம் கோகுலராஜ், அஜித் பொன்சேகா ஆகியோர் ஏற்கனவே பிணையளிக்கப்பட்டுள்ளவர்களாவர். குணரத்தினம் கஜேந்திரன் விடுதலையாகி ஆறு மதங்கள் ஆகின்றன. இவர்கள் தற்போது புனர்வாழ்வுப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் விஷ்வநாதன் ரமேஷ்குமார், இராமநாதன் நவநீதன், தட்சணாமூர்த்தி செல்வகுமார், வேலு யோகராஜா,டேவிட் சுரன்ஜித் கிரிஷாந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு ஐந்து முதல் ஒன்பது வழக்குகள் வரையில் காணப்படுகின்றன. அவற்றில் ஒரு வழக்கின் அடிப்படையிலேயே புனர்வாழ்வுப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஏனைய நான்கு வழக்குள் குறித்த தீர்ப்பு கிடைக்காமையினால் இவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவது குறித்து சிக்கல்கள் காணப்படுகின்றன.


அதேபோன்று சூரிய காந்தி ஜெயச்சந்திரனுக்கு மேல் நீதிமன்றில் காணப்படும் வழக்கிற்கு அமைவாக புனர்வாழ்வு வழங்கும் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றபோதும் வவுனியா மேல் நீதிமன்றில் காணப்படும் வழக்கில் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு அநுராதபுரத்தில் காணப்படும் வழக்கு குறித்து எந்த தீர்ப்பும் அறிவிக்கப்படவில்லை.


இராமசாமி கிருஷ்ணகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் காணப்படும் வழக்கின் அடிப்படையில் புனர்வாழ்வு பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவிசாவளை நீதிமன்றில் அவருக்கும் பிறிதொரு வழக்கு காணப்படுவதோடு யாழ்.நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


இராசலிங்கம் பார்த்தீபனுக்கு மட்டக்களப்பு மன்றில் காணப்படும் வழக்கிற்கு அமைவாக புனர்வாழ்வுப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். எனினும் இவருக்கு மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டையில் வழக்குகள் காணப்படுகின்றன. சூரியமூர்த்தி ஜீவோஷனுக்கு நான்கு வழக்குகள் காணப்படுகின்ற நிலையில் கண்டி மேல் நீதிமன்றில் காணப்படும் வழக்கொன்றின் அடிப்படையில் புனர்வழ்வு பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.


இவ்வாறான நிலையில் குழந்தைவேல் தயாபரன், கார்த்திகேசு நாதன், கோவிந்தசாமி சுந்தரமணி ஆகிய மூவர் மட்டுமே தற்போது புனர்வாழ்வுக்குச் செல்­லக்­கூ­டிய ஏது­நி­லை­களைக் கொண்­டுள்­ளனர்.


உறவினர்களின் கோரிக்கை
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் இருபது பேருடைய விபரத்தை சட்டமா அதிபர் திணைக்­களம் வெளியிட்டுள்ளது. ஒரே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


குறிப்பாக கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, வவுனியா, அநுராதபுரம், மொனராகலை, அம்பாந்தோட்டை போன்ற நீதிமன்றங்களில் அறிவிக்கப்பட்ட 20பேருக்கும் வெவ்வேறுபட்ட வழக்குகள் காணப்படுகின்றன. இருந்தபோதும் அவர்களுக்கு காணப்படும் வழக்குகளில் ஒருவழக்கின் பிரகாரமே புனர்வாழ்வு பொறிமுறைக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.


இவ்வாறான நிலையில் ஏனைய மன்றில் காணப்படும் வழக்குகளை முன்னெடுத்து தீர்ப்பொன்றை பெறுவது தொடர்பான சட்ட
அணுகுமுறைகளை செய்வதில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஒரு வழக்கில் தீர்ப்பைப் பெற்றுள்ளபோதும் வேறொரு மாவட்டத்தில் அதே குற்றத்திற்கான வழக்கில் தீர்ப்பை பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே அனைத்து வழக்குகளையும் கவனத்தில் கொண்டு அவற்றுக்கான இறுதி தீர்ப்பொன்றைப் வழங்குவது குறித்து தெளிவான முடிவொன்று எடுக்கப்படவேண்டும். அதன் பின்னர் அனைத்தையும் கருத்திற்கொண்டு ஒட்டுமொத்தமாக ஒருவருடத்திற்குட்பட்டதான புனர்வாழ்வு வழங்கப்படவேண்டும்.

மேலும் சட்டமா அதிபர் குறித்த இருபது பேரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் அறிவிப்பை விடுத்திருப்பதுடன் குற்றத்தை ஏற்றுக்கொண்டு குறுகியகாலத் தண்டனையுடன் ஒருவருட புனர்வழ்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அது ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றல்ல. எம்மை பழிதீர்க்கவேண்டும் என்பதையே இவ்வறிப்பு வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆகவே இந்த அறிவிப்பு குறித்து மீள் பரிசீலனை செய்து உரிய முடிவொன்றை விரைந்து அறிவிக்கவேண்டும். வெறுமனே கண்துடைப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாமென கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டமா அதிபரின் அறிவிப்பையடுத்து கைதிகளின் உறவினர்கள் தமது சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தனர். இதன்போது சட்டத்தரணிகளும் குறித்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.