2016ம் ஆண்டு தமிழருக்கு அரசியல் தீர்வு கிடைக்காது!- கஜேந்திரகுமார்
2016ம் ஆண்டு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்க் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கனடா உறங்கா விழிகள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதும் எமது மக்கள் இன்றும் நிவாரண உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே இருக்கின்றனர். 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் போரால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் உதவிகளை எதிர்பார்த்திருந்தது சரியானதே. அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கம் எமது போராட்டத்திற்கு பின்புலமாக இருந்த மக்கள் பலம் வாய்ந்த சக்தியாக எழுச்சி பெறுவதை விரும்பவில்லை. பொருளாதார ரீதியாக நாம் எழுச்சி பெறுவதை அந்த அரசாங்கம் விரும்பவில்லை. அவ்வாறான கொடூரமான அரசாங்கம் இருந்தது. அது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் ஜனவரி 8ம் திகதிக்கு பின் ஒரு புதுக்கருத்தை உலகம் கூறுகிறது. ஏதோ நல்லாட்சியாம். ஜனநாயகம் மலர்ந்து விட்டதாம். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் என கூறுகிறார்கள். நல்லிணக்கம் ஏற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் என்றால் தமது போரால், தமது இராணுவ முயற்சியால், தமது இனவழிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முதல் பொருளாதார, சமூக உதவிகளை செய்திருக்க வேண்டும். போர் முடிவடைந்து 6வது வருடம், நல்லாட்சி தொடங்கி 11 மாதம் முடிந்தும் கடந்த இனவழிப்பு செய்த அரசாங்கம் இருந்த போது எதிர்நோக்கிய அதே பிரச்சினையைத் தான் இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் எதிர்நோக்குகிறார்கள்.
கடந்த தேர்தலில் நாம் தோல்வியடைந்தோம். ஊடகங்கள் எமக்கு உரிய இடத்தை கொடுக்கவில்லை. மக்கள் ஒரு குழப்பமான நிலையில் இருந்தார்கள். 2016ம் ஆண்டு எமக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்பட்டது. எமது உறவுகள் நிபந்தனையற்ற வகையில் விடுதலை செய்யப்படுவார்கள் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. எங்களுடைய தலைவர்களால் இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டது.
எங்களுடைய தமிழ் தலைவர்கள் என்று சொல்லக் கூடியவர்களாலே வழங்கப்பட்ட அந்த வாக்குறுதிகளுக்கு மத்தியில் அந்த தேர்தல் நடைபெற்றது. ஆனால் மக்கள் திரும்பவும் நம்பி தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளார்கள். இன்றைக்கு நீங்கள் படுகின்ற கஸ்டத்திற்கு பதில் சொல்வது யார்?
நாங்கள் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்தும் நாங்கள் ஏமாற்றுப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. எம்மைப் பொறுத்தவரை எமது இனம் எதிர்காலத்தில் வளர்ச்சியடைவதற்கு எமக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு சொத்து எங்களுடைய மக்கள். ஈழத்தில் வாழ்கின்ற மக்களுக்கு சரிசமமாக புலம்பெயர் தேசங்களில் எமது உறவுகள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடன் எமது மக்களுக்கு நேரடியான உதவிகளை செய்வதற்கு நாங்கள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவோமாக இருந்தால் நிச்சயமாக எமது மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். குறைந்த பட்சம் குறிப்பிடத்தக்க நிதிகளை பெறக் கூடிய திட்டங்களை வகுத்தால் அதனை செய்ய முடியும்.
ஆனால் இந்த திட்டங்களைப் போட வேண்டிய பொறுப்பு எமது தமிழ் அரசியல் தலைமைகளிடம் தான் இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடிய அந்த தமிழ் அரசியல் தலைமைகள் இது சம்பந்தமாக எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை. தமது தேர்தலுக்காக காசு சேர்க்கவில்லை, தேர்தலின் போது தமக்காக செயற்படவில்லை என ஒரு வயது போன, அனுபவம் பெற்ற, ஒரு நேர்மையான மனிதராக இருக்கக் கூடிய வடமாகாண முதலமைச்சரை குற்றம் சாட்டி அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரும் வேளையை தான் தமிழ் பிரதிநிதிகள் செய்கிறார்கள்.
ஆகவே எம்மைப் பொறுத்தவரை இன்றைக்காவது அந்த உண்மைகளை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 2016ம் ஆண்டுக்குள் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு தேர்தலில் கூறியபடி கிடைக்கப் போவதில்லை. தமிழ் அரசியல் கைதிகள் எவ்வாறு திட்டமிட்ட வகையில் ஏமாற்றப்பட்டார்களோ அதேபோல அரசியல் ரீதியாகவும் நாங்கள் ஏமாற்றப்பட போகிறோம். இன்றைக்கு ஒரு தமிழ் அமைச்சர் கூறுகிறார். அவர் தேர்தல் காலத்தில் பேசிய பேச்சு வேற. இப்பொழுது கிளிநொச்சியில் வந்து பேசியிருக்கிறார். இரு பயங்கரவாதத்தை ஒழித்திருக்கிறோம் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பேசியிருக்கிறார்.
அவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு இடம் கொடுக்க ஆட்கள் இல்லாமல் தான் கடமைப்பட்ட தலைமைக்காக சொல்கிறார். அவர்கள் மக்களிடம் கடமைப்படவில்லையாம். அப்படிபட்டவர்கள் தான் வேணும். தமது சொந்த மக்களை காட்டிக் கொடுத்து, தமது சொந்த மக்களுக்கு நன்மை செய்யாமல் எஜமான்களுக்கு துணை போகும் முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் தேவை. கொழும்பு மேல்மட்டத்தைப் பொறுத்தவரை உண்மையான பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளாமல், உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல், தமது சொந்த மக்களுக்கு உதவாமல் தமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை கொண்டு போவதற்கு துணை போகக் கூடியவர்கள் தான் அவர்களுக்கு தேவை.
அவர்களை கொண்டு வருவதற்கு ஏதாவது செய்து அவர்களை கொண்டு வந்துள்ளனர். எங்களுடைய சொந்த விரும்பின் படியே, தமிழ் மக்களின் விருப்பத்துடனேயே அதாவது எங்களது அழிவை உலகத்திற்கு காட்டுவதற்காக துணை போபவர்களாக எங்களுடைய தலைவர்கள் இருக்கிறார்கள். இதை எமது மக்கள் காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள் என நாங்கள் இருக்க முடியாது. ஏனெனில் நாங்கள் புரிந்து கொள்ளும் போது எங்களுடைய இனத்தினுடைய, தேசத்தினுடைய அத்திவாரமே இல்லாமல் போய்விடும். எமது இனம் மீட்கமுடியாத அளவு அழிக்கப்பட்டிருக்கும்.
அந்த ஒரே ஒரு காரணத்திற்காக தான் நாம் தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதும் எம்மால் முடிந்ததை செய்கின்றோம். இந்த உண்மையை புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் புரிந்து கொண்டுள்ளதால் தான் அவர்கள் எம்முடாக எமது மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். எம்மீது நம்பிக்கை வைத்து செயற்படுகிறார்கள். எம்மைப் பொறுத்தவரை அரசியலுக்கு அப்பால் எமக்கு இந்த தேசம் மீது பற்று இருக்கிறது.
அது ஒன்று தான் எங்களுக்கும் உங்களுக்கும் இருக்கக் கூடிய ஒரே ஒரு உறவு. அந்த தேசத்தின் பற்று தான் எங்களுக்குடைய உறவு. தேசத்தின் முதுகெலும்பு எங்களது மக்கள். எமது மக்கள் இல்லாமல் தேசம் இருக்க முடியாது. தேசத்தில் இருக்கின்ற பற்றின் அடிப்படையில் தேர்தலுக்கு அப்பாலும், அரசியலுக்கு அப்பாலும் நாங்கள் உங்களுக்கு செய்ய வேண்டியதை செய்வோம் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், அரசியல் ஆலோசகர் சி.ஆ.யோதிலிங்கம், வவுனியா தமிழ் சங்க தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், மதகுருமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.