சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக நாமே குரல் கொடுக்க வேண்டும் – ரிஷாத்
மைத்திரியோ, ரணிலோ எதையும் சிறுபான்மை சமூகத்திற்கு தந்துவிடப் பேவதில்லை. எனவே நாம் எமது உரிமைக்காக ஒன்றுபடவேண்டும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உண்மையிலேயே நீண்ட காலத்திற்கு பின் பல கட்சிகள் இங்கே ஒன்று கூடியிருக்கிறார்கள். வடமாகாணத்தில் ஒரு அலுவலகத்தை எங்கே அமைக்கலாம் என்று ஜனாதிபதியோ பிரதமரோ கேட்டால் நான் வவுனியாவைத் தான் சொல்வது. வவுனியா மூன்று இலட்சம் தமிழ் சகோதரர்கள் அகதியாக வந்த போது கைகொடுத்த மாவட்டம். யுத்தத்தின் காரணமாக தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாக வந்த போது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் உணவளித்திருந்தார்கள். அவ்வாறாக இன்பத்திலும் துன்பத்திலும் தன்னை அர்ப்பணிக்கின்ற மாவட்டமாக வவுனியா மாவட்டம் இருக்கிறது.
நாங்கள் அரசியல்வாதிகளாக முரண்பட்ட அறிக்கைகளை விடுத்திருந்தாலும் இன்று ஒன்றாக இருக்கிறோம். அவரவர் சார்ந்த சமூகத்தின் உரிமைக்காக அவர்கள் பேசவில்லையென்றால் தெரிவு செய்த மக்களுக்கான நன்றிக்கடனை செலுத்த முடியாது.
நான் தமிழர்களின் விரோதியல்ல. சிலர் என்னை தமிழர்களின் விரோதியாக காட்டுகிறார்கள். சிலர் சிங்களவரின் விரோதியாக என்னை காட்டுகிறார்கள். ஆனால் யாருக்கும் நான் விரோதியல்ல. நானும் கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவன் தான்.
ஐந்து வருடங்களாக புனர்வாழ்வு அமைச்சராக இருந்தீர்கள் ஏன் முஸ்லிம்களை குடியேற்றவில்லை என்று தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். ஐந்து வருடங்களில் நாலரை வருடங்கள் இந்த நாட்டிலே சமாதானம் இருக்கவில்லை ஆறு மாதங்கள் தான் சமாதானம் இருந்தது.
முகாமிலே தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று இலட்சம் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யாமல் இருபத்தையாயிரம் முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்திருந்தால் நான் ஒரு மனிதனாக இருக்க முடியாது.
தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் முற்றுப்பெறவில்லை. அதைச் செய்யும் கடமை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எனக்கும், மாகாணசபைக்கும், மைத்திரிக்கும், ரணிலுக்கும் இருக்கிறது.
அதேபோல் அகதிகளாக இருக்கும் ஒரு இலட்சம் முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்யும் பொறுப்பு எனக்கு இருப்பதைப் போல் வடமாகாண சபையில் இருக்கின்ற அத்தனை பேருக்கும் இருக்கிறது என்பதனை மனச்சாட்சியுள்ள அத்தனை பேரும் ஏற்றுக்கொள்வார்கள்.
எனவே ஒரு தீர்வு நிச்சயமாக தேவை. 30 வருட யுத்தம் சாதாரண யுத்தமல்ல. இங்கே மக்கள் பிரதிநிதியாக இருக்கும் பலர் ஆயுதங்களை ஏந்தி போராடியவர்கள். உயிரை மாய்க்க துணிந்தவர்கள். எந்த தீர்வையும் தராமல் சிங்கள பெரும்பான்மை எங்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தும் கருவி தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்து வைத்திருப்பது தான்.
எனது ஐந்து உறுப்பினர்கள் மற்றும் ரவூப் ஹக்கீமின் ஏழு உறுப்பினர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்கள் இவர்களை மோதவிட்டால் இந்த நாட்டில் எந்த தீர்வும் வந்துவிடாது. எனவே தமிழ் தலைமைகள் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்கள் ஒரு போதும் தமிழ் மக்களின் எதிரிகளல்ல.
நீண்டகாலம் அரசியலில் இருக்கும் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். மைத்திரியோ, ரணிலோ அவர்கள் எதையும் சிறுபான்மை சமூகத்திற்கு கொண்டு வந்து திணிக்கப்போவதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
எனவே எங்களுடைய உரிமைகளுக்காக ஒன்றுபடுவோம். சிங்களவர்களுக்கு நாங்கள் எதிரியல்ல. எங்களுக்கும் சம உரிமை வேண்டும். அதைப் பெற்றுக்கொள்ள உங்களோடு சேர்ந்து கைகொடுக்க நாங்கள் தயார் என தெரிவித்தார்.