Breaking News

பதவி விலகினார் வடமாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ்

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் அகிலதாஸ் அவர்கள் தன்னை அச்சுறுத்தி பதவிநீக்கம் செய்ய வற்புறுத்தியதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அங்கஜன் இராமநாதன் மீது முறைப்பாடு ஒன்றைச் செய்வதற்கு நேற்று மாலை முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில்,

வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிக்கப்பட்டு சீரழிந்து கொண்டிருந்த நிலையில் நான் அரச உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்காமல், எனது சொந்தப் பணத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் எமது கட்சியைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் திரு. அகிலதாஸ் அவர்கள் வெள்ளப்பெருக்கைக் காரணம் காட்டி பணமோசடியில் ஈடுபட்டதாக நம்பத் தகுந்தவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்.

இவர் தொடர்பில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியமை, கட்டப் பஞ்சாயத்துச் செய்தமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தான் நேரடியாக கதைத்திருப்பதாகவும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் களங்கத்தை ஏற்படுத்தியமை, என ஏராளமான குற்றச் சாட்டுக்கள் இவர் பதவியேற்று மிகச் சொற்ப காலத்துக்குள்ளேயே மக்களாலும், விசுவாசிகளாலும் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதுவரை எந்த கறைபடிதலும் இன்றி மக்கள் சேவை செய்து கொண்டிருக்கும் எனது அரசியலை இது வெகுவாகப் பாதிப்பதாக அமைந்திருந்தது.

ஆதலால் அவரை நேரடியாக அழைத்து இது பற்றி விசாரித்த போது, உங்களுக்கு அரசியல் தெரியவில்லை. பொய் கலந்தது தான் அரசியல். நான் அதனை சரியாகத் தான் செய்கின்றேன் என்று பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தமையினால் அவர் மீது கட்சித் தலைமையின் பணிப்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறினேன். ஆனால், அவர் அதனை ஏற்காது தான் வடமாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக எனக்கும் கட்சிக்கும் இராஜினாமாக் கடிதத்தை தந்ததுடன் வடமாகாண சபை அவைத்தலைவருக்கும் கடிதத்தை கொடுக்கும்படி கூறிச் சென்றார்.

அகிலதாஸ் பொதுவாகவே நல்லவர். அவர் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தான் அரசியலில் குதித்தவர். ஆனால், சிலர் என்னைப் பழி வேண்டுவதாக நினைத்துக் கொண்டு அவரைப் பழி வேண்டியமை என்னைக் கவலையில் ஆழ்த்துகின்றது.