காணாமற்போனோர் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் – ஐ.நா குழு கோரிக்கை
இலங்கையில் காணாமற்போனோர் தொடர்பாக, அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை அறியத்தரும் வகையில், நம்பகமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவினர், நேற்று தமது பயணத்தின் முடிவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் துணைத் தலைவர் பேனாட் டுகைம்டு உங் பெய்க், ஏரியல் டுலிற்ஸ்கி ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
“காணாமற்போனோர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.இந்தநிலையில் அவர்களுக்கு உண்மையை அறியத்தரும் வகையில், நம்பகமான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான உரிய தருணம் இதுவாகும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. இதில் வரவேற்கத்தக்க செயற்பாடுகளை அவதானிக்க முடிந்த போதும், நீண்ட காலம் கடந்து விட்டதால், இலங்கை அரசாங்கம் தமது செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும்.
காணாமற்போனோரின் உறவினர்களிடையே நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டால் தான், நல்லிணக்கச் செயற்பாடுகள் வெற்றியடைந்ததாக கருத முடியும். காணாமற்போனோர் மற்றும் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக சுதந்திரமான ஒரு அமைப்பு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்தினால் இதற்கென ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டிருப்பதனை வரவேற்கிறோம். எனினும் அதன் செயற்பாடுகள் அரசாங்க செயற்பாடுகளை மாத்திரம் மையப்படுத்துவதாக அல்லாமல், முழு சமூகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருத்தல் வேண்டும்.
இதன் செயற்பாடுகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அறிவிக்கப்பட வேண்டும். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அனைத்துலக நிபுணர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்னெடுக்கப்படும் எந்தவொரு பொறிமுறையும் பாதிக்கப்பட்ட மக்களின் ஆலோசனையுடனேயே மேற்கொள்ளப்படவேண்டும்.
சிவில் சமூகத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டோர் காணாமல் போனோரின் உறவினர்கள், எந்தவிதமான அச்சமும் , அச்சுறுத்தலும் இன்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படவேண்டும். ஆனால் இவ்வாறான தரப்பினர் மீது சில அச்சுறுத்தும் செயற்பாடுகள், பாலியல் வன்முறைகள், மேற்கொள்ளப்படுவதாக எமது குழுவிற்கு தகவல் கிடைத்தது. புலனாய்வுப் பிரிவினராலும் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக எமது ஐ.நா. குழுவை சந்தித்த பாதிக்கப்பட்ட சிலர் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இவை ஜனநாயக சமூகத்தில் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கும் இவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குறியதாக ஆக்கப்படுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
எம்மை சந்தித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறும், அவர்களை எவ்விதமான பழிவாங்கல்களுக்கும் உட்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தை கோருகிறோம்.உண்மையைக் கண்டறியும் செயற்பாட்டின் வெற்றியானது பாதிக்கப்பட்டோர். மற்றும் அவர்களின் உறவினர்களின் உணர்விலேயே தங்கியுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்தப் பயணத்தின் போது காணாமற்போனோரின் சுமார் 200 குடும்பத்தினருடன் உரையாடினோம். அவர்கள் தாம் சாட்சியங்கள் அளித்த போது, அச்சுறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினர். பெரும்பாலான குற்றச்சாட்டுகள் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிரானதாகவே இருந்தன.
எனவே, காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு எந்த அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தல்களையும் மேற்கொள்ளக் கூடாது என இலங்கை இராணுவம், பாதுகாப்பு மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அனைவருக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் அனைத்துலக சட்டத்தின் தரத்துக்கு அமைவாக இல்லாமையினாலேயே பலரை இரகசியமாக தடுத்து வைத்து விசாரணை செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால், பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுசீரமைக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காணாமற்போனவர்களின் குடும்பத்தினரில் அதிகம் பாதிப்படைந்துள்ளவர்கள் பெண்களும் சிறுவர்களுமே. அவர்களின் நலனுக்காக வரவு – செலவு திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். காணாமற்போனோருக்காக வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.
காணாமற்போனோருக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட மரணச் சான்றிதழை மாற்றி காணாமற்போனோருக்கான சான்றிதழை இலங்கை அரசாங்கம் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்.
வடக்கு, கிழக்கில் அதிகபட்ச இராணுவப் பிரசன்னமானது சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. எனவே வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தை குறைப்பதன் மூலம் சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.
இந்த விடயங்களை ஆழமாக ஆராய்ந்து உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்கு இலங்கைக்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது.” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் குழுவினரின் இறுதி அறிக்கை, அடுத்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.