இந்தியா-பாக். உறவு மேம்பட மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் - மணிசங்கர் ஐயர்
இந்தியா–-பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டுமானால், நரேந்திர மோடியை பிரதமர் பதவியிலிருந்து விலக்க வேண்டும். மத்தியில், காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். இதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் இதற்காக பாகிஸ்தான் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் செய்தி தொலைக்காட்சி சேவை ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ள இக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நளின் கோலி இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, மணிசங்கர் ஐயர் பேசியுள்ளது முற்றிலும் அபத்தமானது. சில நாட்களுக்கு முன்புதான் மத்திய முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் இதுபோன்று பேசினார். இப்போது மணிசங்கர் ஐயர் பேசியுள்ளார். அவர்கள் இருவரும் பேசியது தேசவிரோதமானது. நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டி விடுகின்றனர் என்றார்.
இதேவேளை, மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா இது தொடர்பாக கூறுகையில், மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட காங்கிரஸ், இப்போது அண்டை நாட்டிடம் ஆதரவு கோரி கெஞ்சுகிறது என்றார்.