Breaking News

சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கப்பட வேண்டும்: ஆனந்தசங்கரி

கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களைமேலும் மேலும் பாதிப்படையவே செய்கின்றன. அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித் தலைக்குனிய வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையே என வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு எதிராகக் கருத்துக்களை கூறியவர் சுமந்திரன்;. ஆனால் சமீபகாலமாக விடுதலைப் புலிகளின் காலத்தில் நடந்த, முஸ்லிம் மக்களின் வெறியேற்றத்தை மட்டும், இனச் சுத்திகரிப்பு என்று கூறிஅதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இவர் வலியுறுத்தி வந்த நிலையில், இவ்வாறான ஒருவருக்கு வாக்களித்தமையை எண்ணி தமிழ் மக்கள் வெட்கப்பட வேண்டும்.

மேலும், சமீபகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் நடவடிக்கையால் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளதால் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் அவர்களின் நிரந்தர தீர்விற்கும் வழி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழ் மக்களின் போராட்டம், அவர்களின் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்த வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை கடுகளவும் அறியாத, கொழும்பில் சுகபோகவாழ்க்கை நடத்திய சுமந்திரனின் நடவடிக்கைகள், அவரின் பச்சோந்தித் தனத்தை எடுத்துக் காட்டுகின்றது.

எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக வாதாடி அதில் படுதோல்வியடைந்ததை தவிர சுமந்திரன் வேறு எதையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ, அல்லது தமிழ் மக்களுக்கோ செய்யவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.