முதலமைச்சரின் விளக்கம் தொடர்பில் தமிழ் மக்கள் முடிவு செய்வர்
இந்து சமயத்தில் ஆகமங்கள் வேதநூல்கள். கிறிஸ்தவத்தில் புனித விவிலியம். இஸ்லாத்தில் திருக்குர்ஆன். இவற்றை படிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படலாம்; மோட்சமும் பெறலாம்.
ஆனால், வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி. வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் விடுத்த அறி க்கையை வாசிக்காதவர்கள் மோட்சம் பெறுவது கடினமே. அந்தளவிற்கு அவரின் அறிக்கை அறம் தழுவியது. நீதியின்பாற்பட்டது. நேர்மையை எடுத்துக் காட்டுவது. நெஞ்சுரத்தை வெளிப்படுத்துவது. நேர்மையானவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் போக்கிரித்தனத்துக்கு தலைசாய்க்க மாட்டான் என்பதை இடித்துரைப்பது.
ஆகையால், வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்த அந்த அறிக்கையை அனைவரும் வாசிக்க வேண்டும். அந்த வாசிப்பு மற்றவர்கள் மீது குறை காண்பதற்காவன்று. மாறாக ஒரு மனிதன் எங்ஙனம் நேர்மையுடன் வாழவேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கானது.
முடிந்தால் அரசறிவியல் கற்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் எழுதிய அறிக்கை, பதில் அளிப்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான ஞானக் கையேடாகக் கொள்ளலாம்.
எதுவாயினும் முதலமைச்சர் எழுதிய அறிக்கையை வாசித்தவர்கள்; பார்த்தவர்கள்; படித்தவர்கள் அனை வருக்கும் ஒரு பேருண்மை தெரிந்திருக்கும். அந்தப் பேருண்மை என்னவெனில், எங்கள் அவலமான நேரத்தில் எங்களுக்கு இறைவனால் தரப்பட்ட தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் என்பதே அதுவாகும்.
இந்தக் கூற்றை யாரேனும் மறுப்பார்களாக இருந் தால் அவர்களிடம் நாம் கேட்கக்கூடிய கேள்வி, விக் னேஸ்வரனை தவிர்த்து எந்த ஒரு அரசியல்வாதியை யாவது அந்த இடத்தில் இருத்திப் பாருங்கள். அவர் நிச்சயமாக தனது கட்சிக்காக; தன்னை கூட்டி வந்தவருக்காக புராணம் பாடுபவராகவே இருப்பார்.
ஆக, கட்சி அல்ல; தமிழ் மக்களுக்காகவே நான் என்று தனது பதவி பற்றியும் சிந்திக்காமல் கதைப்ப தென்றால் அப்படி ஒரு முதலமைச்சரை தமிழ் மக் கள் முன்பு பெற்றதுமில்லை; எதிர்காலத்தில் பெறப் போவதுமில்லை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கானது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் தமிழ் மக்களின் நலன் பற்றி சிந்திக்கவேண்டுமேயன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தாங்கள் நன்மை அடைவது எங்ஙனம் என்பது பற்றி சிந்திப்பது மகா துரோகத்தனமாகும்.
விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனால் ஆசீர்வதிக்கப்பட்ட கட்சி என்பதால்தான் தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைக்காகப் பாடுபடும் என்பதும் தமிழ் மக் களின் நினைப்பாக இருந்தது.
நாம் என்ன செய்தாலும் அது மக்களுக்கு தெரிய வராது. மக்கள் தொடர்ந்தும் எங்களை ஆதரிப்பர். ஆதலால் நாங்கள் எதுவும் செய்யலாம்; எப்படியும் நடக்கலாம்; எந்தவாறும் பிரசாரம் செய்யலாம் என்ற நினைப்போடு செயற்படுவது எந்த வகையில் நியாயமாகும்? இப்போது கூட வடக்கு மாகாண சபையின் இயங்குநிலைக்கு எத்தனையோ தடைகள் செய்யப்படுகின்றன.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு வந்து விட்டு மாகாண சபையின் இயங்கு நிலையைக் குழப்பி முதலமைச்சர் எதுவும் செய்ய வில்லை என்பது போல ஒரு காட்சியை காட்ட நினைப் பது ஒரு போதும் நியாயமாகாது.
இதையாரேனும் அரசியல் இராஜதந்திரம் என்று நினைக்கலாம். ஆனால் நொந்து கெட்டு நூலாகிப் போன தமிழ் மக்களின் வாழ்க்கையில் யார் விளையாட நினைத்தாலும் அவர்களுக்கான தீர்ப்பை கடவுள் உடனடியாகவே வழங்குவார்.
ஆக, வடக்கின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தமிழ் மக்களை ஒரு புதிய பாதைக்கு வழிப்படுத்துகிறது என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்-