மைத்திரி- கமரூன் சந்தித்துப் பேச்சு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்வாழ்வுப் பணிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 6.6 மில்லியன் பவுண்டுகளை (சுமார் 1450 மில்லியன் ரூபா) வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
மோல்டாவில் நேற்று ஆரம்பமான கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டின் போதே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றதாக லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபென்டன்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதி, செலவிடப்படும். இந்தச் சந்திப்பின் போது, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட பிரதான மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு உதவுமாறு இலங்கை ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, இலங்கையின் இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு, பிரித்தானிய ஆயுதப்படைகள் பயிற்சியை வழங்குவதற்கும் டேவிட் கமரூன் இணங்கியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் நிற்பதற்கு பிரித்தானியா உறுதிபூண்டுள்ளது.
இலங்கையின் உறுதிப்பாடு மற்றும் செழுமைக்கு உதவும் பிரித்தானியாவின் நீண்டகால உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவே இந்த 6.6 மில்லியன் பவுண்ட் உதவி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.