Breaking News

புலிகளின் ஆதரவாளர் சமந்தா பவருக்கு இலங்கையில் என்ன வேலை – கம்மன்பில கேள்வி

அமெரிக்காவிலும், ஐ.நாவிலுமே கடமையைக் கொண்டிருக்கும், சமந்தா பவர் இலங்கைக்கு வருவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான சமந்தா பவருக்கு ஐ.நா.விலும் அமெரிக்காவிலுமே கடமைகள் உள்ளன.

அதனைக் கைவிட்டு அவர் எதிர்வரும் 23ஆம் நாள் தொடக்கம், 27ஆம் நாள் வரை இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணம் தொடர்பான விபரங்களை வெளியே கசிய விடாமல் இலங்கை அரசாங்கம் இரகசியமாக வைத்துள்ளது.

கொழும்பு வரும் சமந்தா பவர் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரையே சந்திக்கவுள்ளார். இவர்கள் அனைவரும் நாடு பிரிவதற்கு ஆதரவானவர்கள். சமந்தா பவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர். மனித உரிமைகள் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்துபவர்.

இவ்வாறான ஒருவர், புலிகளின் அரசியல் பிரிவாக இயங்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மட்டும் சந்திக்கிறார். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பாக, முஸ்லிம் காங்கிரசை சந்திக்கவில்லை. அதேபோன்று பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் தொடர்பில் பேச சிங்களத் தலைவர்களைச் சந்திக்கவில்லை.

புலிகளுக்கு எதிராக குரல்கொடுத்து பாதிக்கப்பட்ட தமிழ் தலைவர்களையும் இவர் சந்திக்கவில்லை. அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கவே அவர் இங்கு வருகிறார்.

இலங்கை இன்று அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறியுள்ளது. இலங்கை அரசாங்கம் நாட்டை அமெரிக்காவிற்கு அடிமையாக்கியுள்ளது. தங்களது மற்றொரு மாநிலத்தை பார்வையிடவே சமந்தா பவர் இங்கு வருகிறார்” என்று குறிப்பிட்டார்.