கொடூரமான கொலைகாரர்களை விடுவித்துள்ள அரசாங்கம்! பாரிய ஆபத்து என்கிறார் பீரிஸ்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விடுதலைப் புலிகளின் கொடூரமான கொலைகாரர்களை விடுதலை செய்யும் அரசாங்கம் மறுபுறம் இச்சட்டத்தை பயன்படுத்தி நாட்டை மீட்டெடுத்த படையினரை சிறையில் அடைக்கின்றது. இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டினார்.
அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சரிடம் அந்நாட்டு நீதிபதிகளை இலங்கை தொடர்பான விசாரணைக்கு அனுப்பிவைக்குமாறு கோரும் அதிகாரத்தை சுமந்திரனுக்கு அரசு வழங்கியுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மஹிந்த அணி சார்பு கூட்டு எதிர்க்கட்சி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 12000 பேருக்கு புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யப்பட்டது.
ஆனால் புலி உறுப்பினர்களில் 275 பேருக்கு புனர்வாழ்வு வழங்கவும் முடியாது. விடுதலை செய்யவும் முடியாது. ஏனென்றால் அவர்கள் கொடூரமான கொலைகளையும் பயங்கரமான செயல்களையும் செய்தவர்கள்.
எனவே எமது ஆட்சியில் அவர்களை நாம் விடுதலை செய்யவில்லை. ஆனால் தற்போதைய அரசு அமெரிக்காவினதும், வெளிநாடுகளினதும் அழுத்தங்களுக்கு அடி பணிந்து பயங்கரமான பயங்கரவாதிகளை விடுதலை செய்கின்றது.
அதற்காக இலங்கையின் சட்டத்திலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம், பாதுகாப்பு சட்டத்தையும் நீக்கி பயங்கரவாதிகளை விடுதலை செய்கின்றது. இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
பயங்கரவாதிகளை விடுதலை செய்யும் அரசு மறுபுறம் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி நாட்டை மீட்டெடுத்த படையினரை சிறையில் அடைக்கின்றது. இதேவேளை அண்மையில் இலங்கைக்கு வந்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக்கு பங்களிப்பதற்காக அவுஸ்திரேலிய நீதிபதிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு கோரிக்கை விடுக்கும் அதிகாரத்தை சுமந்திரனுக்கு வழங்கியது யார்? அரசு இந்த அதிகாரத்தை வழங்கியதா?அதேவேளை புலிகளின் ஆதரவாளரான இம்மானுவேல் பாதிரியாரை இலங்கை வருமாறும் அரசு அழைப்பு விடுத்துள்ளது. புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரவுள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து பிரான்ஸ் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது. ஆனால் எமது நாட்டில் பயங்கரவாதச் தடைச்சட்டமூலம் பாதுகாப்புச் சட்டமும் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படுகின்றன. .
ஆனால் நாட்டை மீட்ட எமது படையினருக்கு எதிராக இச் சட்டத்தை பயன்படுத்தி சிறைக்குள் அடைக்கின்றனர். அத்தோடு எமது சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு படையினருக்கு எதிராக சர்வதேச விசாரணையை சட்டமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அது மட்டுமல்லாது நிர்வாக ரீதியில் எமது படையினரை தொழிலில் இருந்து வெளியேற்றுவதற்கும் திட்டங்களும் சட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் இன்று வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விட்டது என்றார்.